இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
கோப்புப்படம்
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், 3 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனிசெப் தூதரான நடிகை கீர்த்தி சுரேஷ்
ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன் போன்ற படங்களில் நடித்து உள்ளார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ரகு தாத்தா படத்தில் இவரது காதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது. நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான நடிகையர் திலகம் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கிடைத்தது. இவர் பாலிவுட்டில் வருண் தவானுடன் இணைந்து 'பேபி ஜான்' என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ படம் வரும் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், விஜய் தேவரகொண்டாவுடன் ‘தோட்டம்’, மிஷ்கினுடன் ஒரு படம் என நடித்து வருகிறார்.
அர்ஜென்டினா ஆலையில் வெடிவிபத்து: 22 பேர் காயம்; விமான சேவை பாதிப்பு
அர்ஜென்டினாவின் பியூனோஸ் அயர்ஸ் நகருக்கு வெளியே கார்லோஸ் ஸ்பெகாசினி என்ற நகரில் ஆலை ஒன்றில் வேளாண் ரசாயன பொருட்களின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு இந்த ஆலையில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில், அருகேயிருந்த எஜீஜா சர்வதேச விமான நிலையத்தின் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பலரும் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
ஐபிஎல் 2026: சென்னை அணி விடுவித்த வீரர்கள் பட்டியல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்தது.
இந்த நிலையில் சென்னை அணி 11 வீரர்களை விடுவித்துள்ளது. சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ள வீரர்கள்:
ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரனா, டிவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் கரன், ராகுல் திரிப்பாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், அந்த்ரே சித்தார்த், கமலேஷ் நாகர்கோட்டி
எஸ்.ஐ.ஆர். விவகாரம்; தி.மு.க.வை கண்டித்து ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
“தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை(எஸ்.ஐ.ஆர்.) தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. ஒருபுறம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தி.மு.க.வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில், 17.11.2025 - திங்கட் கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஐ.பி.எல். 2026: சென்னை அணி தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், இன்று மாலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடைபெற்றது.
இந்நிலையில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் மகேந்திரசிங் தோனியும் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் அடுத்த சீசனிலும் விளையாட உள்ளது உறுதியாகி உள்ளது.
பராமரிப்பு பணி: சென்னையில் 18ம் தேதி மின்தடை
சென்னையில் வருகிற 18.11.2025, செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தரமணி: எம்.ஜி.ஆர். சாலை, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி, ஓ.எம்.ஆர்., காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம், ஸ்ரீனிவாசா நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, சர்ச் சாலை, சிபிஐ காலனி மற்றும் மேற்சொன்ன இடங்களைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும்.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுக்கு காரணம்... சீமான் பரபரப்பு பேட்டி
காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது மகிழ்ச்சிதான். ஏனெனில் காங்கிரஸ் கட்சி காமராஜர் காலத்தில் இருந்ததுபோன்று இல்லை. அது வெறும் கம்பெனி மட்டும்தான் என்று கூறினார்.
எஸ்.ஐ.ஆர். படிவங்கள் படித்தவர்களே குழம்பும் அளவிற்கு உள்ளது. எஸ்.ஐ.ஆர்.-ஐ எதிர்ப்பது போல், மறைமுகமாக தி.மு.க. ஆதரிக்கிறது என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். தமிழகத்திலும் இஸ்லாமிய வாக்குகள் நீக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பீகார் சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது.
பீகார் சட்டசபை தேர்தலில் தோற்ற போதும்... பா.ஜ.க., ஜே.டி.யூ.வை பின்னுக்கு தள்ளி தேஜஸ்வி யாதவ் சாதனை
பீகார் சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது. இந்த தேர்தலில், தேஜஸ்வி யாதவ் தோற்ற போதும், அவருடைய கட்சி சாதனை ஒன்றை செய்துள்ளது. அது அதிக வாக்கு சதவீதம் ஆகும்.
பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ.) ஆகிய கட்சிகளை இந்த விசயத்தில் பின்னுக்கு தள்ளி ராஷ்டீரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) அதிக வாக்கு சதவீதம் (23 சதவீதம்) கொண்டுள்ளது. இது பா.ஜ.க. (20.08) பெற்ற வாக்கு சதவீதத்தினை விட 2.92 சதவீதம் மற்றும் முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விட 3.75 சதவீதம் அதிகம் ஆகும்.
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல்; உணவு வழங்குவது கொடூரமான நகைச்சுவை: அன்புமணி ராமதாஸ்
திமுக அரசின் அடக்குமுறைகளையும் கடந்து, எதற்கும் அஞ்சாமல் தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். அவர்களின் போராட்டம் இன்று 107-ம் நாளை எட்டியிருக்கிறது. ஆனால் இன்று வரை தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு கூட முன்வரவில்லை. அதற்கு காரணம் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் குப்பை அள்ளும் பணிக்கான ரூ.2,300 கோடி ஒப்பந்ததை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதன் மூலம் தங்களுக்கு கிடைக்கும் ஆதாயங்களை இழக்க ஆட்சியாளர்கள் விரும்பாதது தான்.
ஆனால் தூய்மைப் பணியாளர்களுக்கு இழைத்த துரோகத்தை மறைப்பதற்காக அவர்களுக்கு உணவு வழங்கும் நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றியிருக்கிறது. ஏற்கனவே திமுகவைச் சேர்ந்த சிலரை தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி முதல்-அமைச்சரை சந்திக்க வைத்து திமுக அரசின் நலத்திட்டங்களை தூய்மைப் பணியாளர்கள் வரவேற்பதைப் போன்ற புளித்துப் போன நாடகத்தை அரங்கேற்றிய ஆட்சியாளர்கள், இப்போது அடுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.