இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இரண்டாவது அமர்வு, மார்ச் 10-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 13 வயது சிறுமி உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் இன்று குளித்துக்கொண்டிருந்த 6 பேர் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் மீட்கப்பட்டனர். 13 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். மற்றொரு சிறுமியை தேடும் பணி நடைபெறுகிறது.
சிங்கப்பூர் அதிபர் ஒடிசா வருகை
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் இரண்டு நாள் பயணமாக இந்தியாவின் ஒடிசா மாநிலத்திற்கு இன்று வந்தார். புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், தலைமைச் செயலாளர் மனோஜ் அஹுஜா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
சிங்கப்பூர் அதிபரின் இந்த சுற்றுப்பயணத்தின்போது சிங்கப்பூருக்கும், ஒடிசா மாநிலத்திற்கும் இடையே பலவேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
டெல்லியில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டார். அதில் 5 ரூபாய்க்கு சத்தான உணவுகளை வழங்கும் வகையில் ஜே.ஜே. கிளஸ்டர் பகுதிகளில் அடல் உணவகங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் சுற்றுப்பயண்ம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர், அந்த நாட்டின் புதிய தலைவர்களைச் சந்தித்து, இஸ்ரேலுடனான போர்நிறுத்தம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
டெல்லியில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர்கள் ரவீந்தர் சோலங்கி, நரேந்தர் கிர்சா ஆகியோர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இது ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை
அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரை குற்றவாளிகள் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று அறிவித்தது. அத்துடன், இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்தது.