பாமகவை வழிநடத்துபவர் அன்புமணிதான் என்று பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
பெங்களூருவில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. டானரி சாலையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். பெங்களூருவின் தாழ்வான பகுதிகள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, சவரன் ரூ.70,040க்கும், கிராம் ரூ.8,755க்கும் விற்பனை ஆகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் அறுவடைக்கு தயாரான சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. நெற்பயிர்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு இன்றும் நாளையும் மஞ்சள் எச்சரிக்கை
தமிழ்நாடில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.
சென்னையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் இலவச குடிநீர் ஏடிஎம்
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் முதல் கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்களை விரைவில் தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என்று இரண்டு வகைகளில் குடிநீர் வழங்கப்படும். வாட்டர் பாட்டில்களில் தண்ணீரை பிடித்துப் பருகும் வகையில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி மற்றும் மார்க்கெட் பகுதிகள் என 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கர்நாடகாவில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்பு
கர்நாடகா, கேரளாவில் இன்று முதல் 7 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கர்நாடகாவில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஈரோடு இரட்டைக் கொலை - 4 பேர் கைது
ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விளக்கேத்தி அருகே தோட்டத்து வீட்டில் நகைக்காக முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன் ஆகியோரைத் தொடர்ந்து நகைக் கடை உரிமையாளர் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிசிசிஐ வெளியேற முடிவு
இந்தியா- பாகிஸ்தான் மோதல் எதிரொலியாக ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசிய கிரிக்கெட் சங்கத் தலைவராக பாக். மந்திரி மொஸின் நக்வி இருப்பதால் பிசிசிஐ முடிவு என கூறப்படுகிறது. கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் சங்கத்திற்கு பிசிசிஐ மின்னஞ்சல் அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.