இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...19-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன் நடிப்பில், இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘THUG LIFE’ படத்தின் 2-வது பாடல் ‘சுகர் பேபி’ மே 21-ந்தேதி வெளியாகிறது.
ஐ.பி.எல். தொடரில் லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
ஆசிய கிரிக்கெட் சங்க தலைவராக பாகிஸ்தானின் மொசின் நக்வி பதவி வகிக்கும் நிலையில் ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது என தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த தகவலை பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா மறுத்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடர் குறித்து பி.சி.சி.ஐ. இதுவரை பேச்சுவார்த்தையோ, முடிவோ மேற்கொள்ளவில்லை. ஐ.பி.எல். மற்றும் இங்கிலாந்து தொடர்கள் மீதுதான் தற்போது எங்களது முழு கவனம் உள்ளது என்று கூறினார்.
ஈரோடு தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையை பாராட்டுகிறேன், அனைத்து வழக்குகளிலும் விரைவில் குற்றவாளிகளை காவல் துறை கைது செய்ய வேண்டும் என தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிவகிரியில் நாளை நடக்கவிருந்த உண்ணாவிரதம் ரத்து செய்யப்படுகிறது என்றும் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மய அகல ரெயில் பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் 20-5-2025 அன்று (நாளை) நடைபெற இருக்கிறது. முதன்மை தலைமை மின் பொறியாளர் முன்னிலையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் இந்த ரெயில் பாதையை யாரும் கடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி அருகில் 9.56 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் டைடல் பார்க் அமைக்க அரசு முடிவு செய்து, டைடல் பார்க்கை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,, டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டு இருந்தது. அந்த மனுவானது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்தியா என்பது சத்திரம் அல்ல. எல்லா இடங்களில் இருந்தும் அகதிகளை வரவேற்க முடியாது என கூறி இலங்கை தமிழரின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
சாம்சங் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றிய பேச்சுவார்த்தையில் தமிழக தொழில் துறை அமைச்சர், சாம்சங் நிறுவன உயரதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் இன்று கலந்து கொண்டன. இதன் முடிவில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. 23 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
6 நாள் பயணமாக இன்று ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து நாடுகளுக்கு செல்கிறார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர். இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட சர்வதேச விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு: மழை பாதித்த பகுதியில் மக்களை இன்று நேரில் சந்திக்கிறார் முதல்-மந்திரி சித்தராமையா
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியது.
பஸ், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகளும் அதிக அவதிக்கு உள்ளானார்கள். மழைநீர் தேங்கியதில் சாக்கடை செல்லும் வழிகள் முழுவதும் நிரம்பி வழிந்தன. இதனால், அரையடி உயரத்திற்கு வீடுகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தது. கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் பகுதியளவு மூழ்கின.
இதுபோன்ற சூழலில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா இன்று மாலை 4 மணியளவில் மழை பாதித்த பகுதிகளுக்கு நேரில் செல்கிறார். அவர் பெங்களூரு நகரை ஆய்வு செய்வதுடன், மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கவனத்துடன் கேட்டறிகிறார். அவருடன் அதிகாரிகளும் செல்ல உள்ளனர்.