திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நந்தம்பாக்கத்தில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 14 தொழிற்பேட்டைகளை உருவாக்கியுள்ளோம். இன்னும் உருவாக்க உள்ளோம். நாட்டில் உள்ள மொத்த பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 41 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர் என்றார்.
ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் இல்லை -தமிழ்நாடு அரசு
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு விதித்த சென்னை போலீஸ் கமிஷனர் அருண்
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக்கூடாது என்று கூறியுள்ளார். பெரம்பூரில் நேற்று லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சவுமியா உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கையை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுளது.
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ராகுல் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். ராகுல்காந்திக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், பிரதமர் மோடியும் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காள தேசத்தினர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காள தேசத்தை சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ஆதார் அட்டை மூலம் சட்டவிரோதமாக தங்கி, பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.போலி ஆதார் அட்டைகளை வழங்கும் முகவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
அமெரிக்காவின் டெக்சாசில் சோதனை முயற்சியின்போது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியது. நிலைத் தணிக்கையின்போது ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் வெடித்து சிதறி உள்ளது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை அத்துமீறல்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. மீனவர்களின் ஐந்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளை விரட்டியடித்தது. தடை காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையின் அத்துமீறலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் 10 ரவுடிகள் கைது
சென்னை வியாசர்பாடி, செம்பியம், கொடுங்கையூர், திருவிக நகர், புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சரித்திர பதிவேட்டில் உள்ள 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
ஏர் இந்தியா கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787 விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெட்டிக்கு வெளிப்புறத்தில் ஏற்பட்ட சேதத்தால் டிஜிட்டல் ரெகார்டிங் தரவை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என இந்திய நிபுணர்கள் தெரிவித்ததால் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரவுகளை பெற அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.