இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025

Update:2025-10-22 09:05 IST
Live Updates - Page 2
2025-10-22 10:49 GMT

‘தேர்தலில் பெரும் யுத்தத்தை சந்திக்க வேண்டிய சூழல் நிலவுகிறது’ - கவிஞர் சினேகன்

திரைப்பட பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியுமான கவிஞர் சினேகன், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் கவிஞர் சினேகன் செய்தியாளர்களை சந்தித்த பேசினார். அப்போது அவர், “வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சென்னையில் நான் இருக்கும் பகுதியில் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டன.

மேலும் மீதம் உள்ள பணிகளை பெருமழை வருவதற்கு முன்பாக நிறைவு செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் இத்தனை வருடங்களாக வந்த தேர்தல்களை விட, எதிர்வரும் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருவதை பார்க்கும்போது, சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் பெரும் யுத்தத்தை சந்திக்க வேண்டிய சூழல் நிலவுவதாக தெரிகிறது” என்று தெரிவித்தார்.

2025-10-22 10:44 GMT

கடலூர்: மழையால் சுவர் இடிந்து விழுந்து தாய்- மகள் உயிரிழப்பு: டாக்டர் அன்புமணி ராமதாஸ் இரங்கல்

கடலூர் மாவட்டத்தில் ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தாய் மற்றும் மகள் உயிரிழந்தனர். அவர்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அந்த வீட்டில் வசித்து வந்த யசோதை, ஜெயா ஆகிய இருவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன்.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்து இருக்கிறார்.

2025-10-22 10:43 GMT

ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டி வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா (809 புள்ளி) முதலிடத்திலும், இங்கிலாந்து கேப்டன் நாட் சிவெர் (726 புள்ளி) 2-வது இடத்திலும் தொடர்கின்றனர்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி (718 புள்ளி) ஒரு இடம் முன்னேறி, சக நாட்டவரான பெத் மூனியுடன் (718) 3-வது இடத்தை பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (619) 3 இடம் அதிகரித்து 15-வது இடத்தில் இருக்கிறார்.

இதன் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (778), ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னர் (686) முறையே முதல் இரு இடத்தில் நீடிக்கின்றனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா (669) 3 இடம் ஏற்றம் கண்டு 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

2025-10-22 10:24 GMT

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் ஆகிய பதவிகளில் 2025-ம் ஆண்டு மொத்தம் 3,935 காலிப்பணியிடங்கள் நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகியது. இப்பதவிகளுக்கு ஒரே கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, ஜூலை 12-ம் தேதி தேர்வு நல்ல முறையில் நடைபெற்றது. இந்தாண்டு குரூப் 4 தேர்வை 11.48 லட்சம் பேர் எழுதியுள்ளனர். ஒரு இடத்திற்கு தோராயமாக 250 பேர் என்ற விதம் போட்டி நிலவுகிறது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிராபகர் அறிவித்தார். அதன்படி, செப்டம்பர் இறுதியில் 727 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. தற்போது மொத்தம் 4,662 காலிப்பணியிடங்கள் உள்ளன.

2025-10-22 10:03 GMT

புயலுக்கு வாய்ப்பு இல்லை - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக இடங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இந்தநிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை. தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு

மண்டலமாக வலுப் பெறாது . இது அடுத்த 24 மணி நேரத்தில், வடதமிழ்நாடு – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2025-10-22 09:29 GMT

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில், இன்றைய தினம் ஒகேனக்கல் காவிரிக்கு வரும் நீர்வரத்து 32,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

2025-10-22 09:17 GMT

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தனது தொகுதியில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவிகளுக்கு, மத்திய அறிவியல் துறை மந்திரியான டாக்டர் ஜிதேந்திரா சிங், லேப்டாப்புகளை வழங்கி உள்ளார்.

2025-10-22 08:55 GMT

வேலூர்: கனமழை எச்சரிக்கை; பள்ளி மாணவர்களை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்ப உத்தரவு

வேலூரில் கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பள்ளி மாணவர்களை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

2025-10-22 08:30 GMT

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்பு குறைவு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

2025-10-22 08:01 GMT

இளையராஜா காப்புரிமை விவகாரம்: வருமான வரி விவரங்கள் தாக்கல்

இளையராஜா தொடர்ந்த வழக்கில் சோனி நிறுவனம் வருமான விவரங்களை சீலிட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில்  தாக்கல் செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்