இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
x
தினத்தந்தி 22 Oct 2025 9:05 AM IST (Updated: 22 Oct 2025 8:14 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • தருமபுரியில் பருவமழை பாதிப்பு - உதவி எண்கள் அறிவிப்பு
    22 Oct 2025 7:39 PM IST

    தருமபுரியில் பருவமழை பாதிப்பு - உதவி எண்கள் அறிவிப்பு

    வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் பாதிப்பு கட்டுப்பாட்டு அறைக்கு புகாரளிக்க உதவி எண்களை அறிவித்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் - 1077, 04342-231077, 231500 மற்றும் 04342-230067 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் அவசரத் தேவைகள், உதவிகள் தொடர்பாக புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்
    22 Oct 2025 6:11 PM IST

    நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

    நாமக்கல்: கொல்லிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் ஆர்ப்பரித்துக்கொட்டுவதால் நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

  • விளைநிலங்களில் தேங்கிய மழைநீர்
    22 Oct 2025 6:08 PM IST

    விளைநிலங்களில் தேங்கிய மழைநீர்

    நீலகிரி: கோத்தகிரியில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் புகுந்த மழைநீர். கேரட், பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் அழுகி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

  • நாட்டு வெடி விபத்து - காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம்
    22 Oct 2025 6:00 PM IST

    நாட்டு வெடி விபத்து - காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம்

    திருவள்ளூர் - பட்டாபிராமில் நாட்டு வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் விஜய கிருஷ்ணராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். உதவி ஆய்வாளர் திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை பிரிவில் தலைமை காவலர் பணியிட மாற்றம் செய்து ஆவடி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

  • சாத்தனூர் அணையில் நீர்திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை
    22 Oct 2025 5:58 PM IST

    சாத்தனூர் அணையில் நீர்திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

    தொடர்மழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக இருக்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் 113.20 அடியாக உள்ளது. அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • 22 Oct 2025 5:56 PM IST

    கேரளா: பம்பையில் இருந்து குடியரசுத் தலைவர் புறப்பட இருந்த நிலையில், அப்பகுதியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் அவர் புறப்படுவதில் தாமதம் ஆனது.

  • 22 Oct 2025 5:02 PM IST

    ‘தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டால் வி.சி.க.வை விமர்சிப்பதை நிறுத்தி விடுவார்கள்’ - திருமாவளவன்

    செங்கல்பட்டில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

    “தி.மு.க. கூட்டணியில் இருந்து வி.சி.க. வெளியேறிவிட்டால், அதன் பிறகு யாரும் நம்மைப் பற்றி விமர்சனம் செய்து பேச மாட்டார்கள். நாம் அவர்களுக்கு ஒரு இலக்காகவே இருக்கமாட்டோம். அவர்களின் வேலை முடிந்துவிடும், அவர்களின் செயல்திட்டம் நிறைவேறிவிடும்.

  • 22 Oct 2025 5:00 PM IST

    வடகிழக்கு பருவமழை தீவிரம்; நேரில் ஆய்வு செய்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    1913 என்ற உதவி எண்ணிற்கு பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை தானே நேரடியாக கேட்டறிந்ததுடன் உதவி எண்ணில் தன்னிடம் தொடர்பு கொண்ட புகார்களின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் ஜெய்சங்கர் சாலை பகுதிக்கு நேரில் சென்று தேங்கிய மழை நீர் அகற்றப்பட்டதை நேரில் பார்வையிட்டு, சீரமைப்பு பணிகளை முடுக்கி விட்டார்.

    தொடர்ந்து 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அண்மையில், தான் தொடங்கி வைத்த விருகம்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணிகளின் காரணமாக நெற்குன்றம் பகுதியில் நீர் சீராக செல்கின்றதா? என நேரில் பார்வையிட்டு, பணியின் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

  • 22 Oct 2025 4:37 PM IST

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா துவக்கம்

    அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா நிகழ்ச்சிகள் 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு வருட கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. இதையொட்டி காலை தனுர் லக்னத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க, வள்ளி தேவசேனா சமேத சண்முக சுவாமி, சந்திரசேகரர், வீரபாகு, வீரகேசரி சுவாமிகள் மலைக்கோவிலில் இருந்து படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    வரும் 26-ம் தேதி வரை காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 27ம் தேதி 7ம் திருநாளாக மகா கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் சுவாமிநாதன், கோயில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உபயதாரர்கள் பங்கேற்புடன் செய்து வருகின்றனர்.

  • 22 Oct 2025 4:22 PM IST

    ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கம் விலை... நிலவரம் என்ன...?

    சர்வதேச அரசியல் சூழ்நிலையால் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ. 60 ஆயிரமாக இருந்த தங்கம் விலை கடந்த 17ம் தேதி ரூ. 97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டது. இதனை தொடர்ந்து தங்கத்தின் விலை மெல்ல குறைந்து வருகிறது.

    இதனிடையே, சென்னையில் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 2 ஆயிரத்து 400 குறைந்து ஒரு சவரன் ரூ. 93 ஆயிரத்து 600க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 300 குறைந்து ரூ. 11 ஆயிரத்து 700க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில், ஒரேநாளில் 2வது முறையாக தங்கம் விலை மாலையும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று மாலை ஒரு சவரன் தங்கம் ரூ. 1 ஆயிரத்து 280 குறைந்து ரூ. 92 ஆயிரத்து 320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ. 160 குறைந்து ரூ. 11 ஆயிரத்து 540க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 More update

Next Story