கும்மிடிப்பூண்டி; 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்
கும்பிடிப்பூண்டி அருகே சித்தராஜன் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனம் வெளியேறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நுங்கம்பாக்கம் கல்லூரி பாதை இனி ஜெய்சங்கர் சாலை
சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை 'ஜெய்சங்கர் சாலை' என பெயரை மாற்ற மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 1964 - 2000 வரை கல்லூரிப் பாதையில் நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்தார். நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சாலையின் பெயரை மாற்ற மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். ஹிமகிரி, ஐ.என்.எஸ். உதயகிரி ஆகிய இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு இன்று (ஆக.26) அர்ப்பணிக்கப்பட்டன. இந்தக் கப்பல்களில் இருந்து சூப்பர்சோனிக், பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை கடலில் உள்ள இலக்குகளுக்கு எதிராக செலுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.
மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
புதுடெல்லி,
மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்கி வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தாலும், 134 அடியில் தண்ணீரை திறந்து விடுகிறார்கள் என்று அவர்கள் குற்றம்சாட்டினர். அதேபோல், மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
மேலும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை கைவிட வேண்டும், முல்லைப் பெரியாறு அணைக்கு தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க வேண்டும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பால் பெருவெள்ளம்
ஜம்மு காஷ்மீரின் தோடாவில் மேகவெடிப்பு காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதிப்பு குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
விரைவில் பூந்தமல்லி டூ போரூர் மெட்ரோ ரெயில் சேவை
பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரை மெட்ரோ ரெயில்கள் மற்றும் வழித் தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கான சோதனைகள் நிறைவு பெற்றதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மின்சாரம், காற்றழுத்தம், அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது விரைவில் பூந்தமல்லி டூ போரூர் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். பாடலை பாடியதற்கு மன்னிப்பு கேட்டார் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார்
கர்நாடக சட்டமன்றத்தில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாடலைப் பாடியதற்கு அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “காங்கிரஸ்காரனாகப் பிறந்த நான், ஒரு காங்கிரஸ்காரனாகவே இறப்பேன். ஆர்.எஸ்.எஸ்.-ஐ புகழ்வது எனது நோக்கமல்ல. காந்தி குடும்பம்தான் எனது கடவுள்” என்று தெரிவித்துள்ளார்.
முதல் தெலுங்கு ஹீரோ...நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு கிடைத்த கவுரவம்
இங்கிலாந்தில் உள்ள ''வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'' புத்தகத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவின் பெயர் இடம்பிடித்திருக்கிறது.