தக்காளி விலை கிடுகிடு உயர்வு.!
மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது.;
திருச்சி,
நம் சமையலில் அத்தியாவசிய பொருளாக இருக்கும் தக்காளியின் விலை நாடு முழுவதும் கணிசமாக உயர்ந்து வருகின்றது. இதற்கு கடந்த மாதம் பெய்த கனமழையை தொடர்ந்து தக்காளி வரத்து குறைந்ததும், மறுபக்கம் தக்காளிக்கான தேவை அதிகரித்துள்ளதும் காரணமாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுவும் காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இதன்காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குறைந்துள்ளது. இதனால் வழக்கத்துக்கு மாறாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது திடீரென ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுவதால் விலையை கேட்டதும் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வழக்கமாக 2 கிலோ, 3 கிலோ என்று வாங்கிச்செல்லும் அவர்கள், அரை கிலோ அளவில் வாங்கிச்சென்றனர். தற்போது நடைபெற்று வரும் திருமண சீசன் மற்றும் வரவிருக்கும் ஆண்டு இறுதி கொண்டாட்டங்களின் வலுவான தேவை காரணமாக தக்காளியின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.