நெல்லையில் இன்று போக்குவரத்து மாற்றம்
முதல்-அமைச்சர் வருகையையொட்டி நெல்லை மாநகர பகுதியில் இன்று (வியாழக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
நெல்லை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (06.02.2025) மற்றும் நாளை (07.02.2025) அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருநெல்வேலிக்கு வரும் நிகழ்வை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர பகுதிகளில் இன்று (6.02.2025ஆம் தேதி) கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி-மதுரை 4 வழிச்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுவழியில் கொங்கந்தான்பாறை ரிலையன்ஸ் பல்க், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர் தாழையூத்து ரோடு வழியாக மதுரை செல்ல வேண்டும்.
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து ஐகிரவுண்டு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் (வண்ணார்பேட்டை-மார்க்கெட் பாளையங்கோட்டை பஸ் நிலையம் மார்க்கம்) நெல்லை ராம் தியேட்டர் உடையார்பட்டி வடக்கு புறவழிச்சாலை, தெற்கு புறவழிச்சாலை வழியாக குலவணிகர்புரம் சென்று அங்கிருந்து பாளையங்கோட்டை பஸ் நிலையம் வழியாக ஐகிரவுண்டு செல்ல வேண்டும்.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் புதிய பஸ்நிலையத்தில் இருந்து கொங்கந்தான்பாறை சென்று, புறவழிச்சாலை, 4 வழிச்சாலை வழியாக சீனிவாசநகர் சென்று செல்ல வேண்டும். இதேபோல் சீனிவாச நகர் பகுதியில் வரக்கூடிய பஸ்கள், வாகனங்கள் 4 வழிச்சாலை வழியாக கொங்கந்தான்பாறை வரை சென்று அங்கிருந்து புதிய பஸ் நிலையத்திற்கு வர வேண்டும்.
நாளை (07-02-2025) நலத்திட்ட உதவிகள் வாங்குவதற்காக அம்பை, சேரன்மாதேவி, களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர், திசையன்விளை பகுதியில் இருந்து வரக்கூடிய பயனாளிகளின் வாகனங்கள் கொங்கந்தான்பாறையில் இருந்து புறவழிச்சாலையில் வந்து சீனிவாசநகர் வந்து அங்கிருந்து ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
பாப்பாக்குடி, மானூர், நெல்லை டவுன் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் தச்சநல்லூர் புறவழிச்சாலை வழியாக வந்து சீனிவாசநகர் வந்து அங்கிருந்து பெல் மைதானத்தில் நிறுத்த வேண்டும். பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பயனாளர்களின் வாகனங்கள் ஏ.ஆர்.லைன் வழியாக வந்து பாளையங்கோட்டை சென்று சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தவேண்டும். மொத்தம் 345 வாகனங்கள் நிறுத்துவதற்கு இட வசதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாநகரப் பகுதியில் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர மாவட்ட பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்