ஒரேநேரத்தில் தட்கல் முன்பதிவு செய்ய ஏராளமானோர் முயற்சி.. முடங்கிய ரெயில்வே இணையதளம்

தீபாவளியை ஒட்டி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பவர்களால் ரெயில்வே இணையதளம் முடங்கி உள்ளது.;

Update:2025-10-17 11:13 IST

சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதையொட்டி சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, பெங்களூர், திருவனந்தபுரம், கொல்லம் உட்பட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன.

ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரித்து உள்ள நிலையில், குடும்பத்துடன் செல்லும் பெரும்பாலானோர் ரெயில்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சிறப்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து வருகின்றன. பெரும்பாலான ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100-ஐ தாண்டியுள்ளது. ஆம்னி பஸ்களை விட ரெயில்களில் கட்டணம் குறைவு என்பதால், வழக்கமான ரெயில் மற்றும் சிறப்பு ரெயில்களில் டிக்கெட் கிடைக்காதோர் அடுத்ததாக பயணம் செய்யும் ஒரு நாளுக்கு முன்னதாக கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க காத்திருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தீபாவளியை ஒட்டி தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பவர்களால் ரெயில்வே (IRCTC) இணையதளம் முடங்கி உள்ளது.

காலை 11 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏராளமானோர் முயற்சி செய்ததால் ரெயில்வே இணையதளம் முடங்கியது. இதனால் தீபாவளியை ஒட்டி நாளை (அக்.18) பயணிக்க தட்கல் முன்பதிவுக்கு காத்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் டிக்கெட்டுகளை ரத்து செய்ய இயலாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்