ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
இளவேனில் வாலறிவனின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.;
16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை இளவேனில் 253.6 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
குஜராத்தில் வசித்து வரும் 26 வயதான இளவேனில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். உலகக் கோப்பை போட்டியில் பல தங்கப்பதக்கங்களை வென்று இருக்கும் இளவேனில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தனிநபர் பிரிவில் கைப்பற்றிய 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தளராத தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும், தாய்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் இந்தியாவின் தங்கமகள் இளவேனில் வாலறிவனின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.