"வீட்டிற்கு ஒருவரை தவெகவில் சேர்க்க வேண்டும்.." - விஜய்

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் வியூகங்கள் மற்றும் சுற்றுப்பயணம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.;

Update:2025-07-04 12:24 IST

சென்னை,

தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேருக்கு நுழைவு அடையாள அட்டை அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் கட்சியின் தலைவர் விஜய் அந்த கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை வருகை தந்தார். தற்போது விஜய் தலைமையில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தவெக செயற்குழு கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் என். ஆனந்த், "வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் இன்று வெளியாகும். விஜயை, தமிழக மக்கள் தமிழ்நாட்டின் மாற்று சக்தியாகவும், நம்பிக்கையாகவும் பார்க்கின்றனர். விஜயின் எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

இந்நிலையில் வீட்டிற்கு ஒருவரை தவெகவில் சேர்க்க வேண்டும் என்றும், ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பேர் நிர்வாகியாக இருக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் 120 மாவட்டங்கள், 12,500 கிராமப் புறங்களில் தவெகவின் கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விஜய்யின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்கு முன் மாநில மாநாட்டை நடத்த தவெக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. 2026 சட்டசபை தேர்தல், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்டு வருகிறார். 

கூட்டம் முடிவில், கூட்டணி மற்றும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட இருக்கிறார். செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து தவெகவின் அடுத்த கட்ட நகர்வு தொடங்க இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்