தவெக தலைவர் விஜய் தான் கரூர் சம்பவத்திற்கு முழு பொறுப்பு - சரத்குமார்

தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தலைவரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-28 02:01 IST

சென்னை,

பா.ஜனதா நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, கூட்டத்தில் கலந்து கொண்ட 7 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் 40 பேருக்கும் மேற்பட்டோர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பதும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியும் பெரும் வேதனையளிக்கிறது.

தவெக தலைவர் 3 ம் கட்ட சுற்றுப்பயணம் நேற்று மேற்கொண்ட நிலையில், இதுபோன்ற பேரிடர் ஏற்படக்கூடாதென முதல்கட்ட சுற்றுப்பயணத்தின் போதிலிருந்து காவல்துறையினர் அனுமதி வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்தனர். ஆனால், காவல்துறையினரின் அனுமதியை எதிர்மறையாக எடுத்துக்கொண்டு அதையும் தவெக தலைவர் விமர்சித்து பேசியிருந்தார்.

அரசியல் பயணத்தில் முதன்மையானது பாதுகாப்பு. தன்னுடைய சுயபாதுகாப்பை ஒரு கட்சியின் தலைவர் உறுதி செய்து கொண்டால் மட்டும் போதாது. தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தலைவரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். முதல்முறை சுற்றுப்பயணத்திற்காக திருச்சி விமான நிலையம் வந்து இறங்கிய போது, வரவேற்க சென்ற தொண்டர்களின் கூட்டமே அரசு உடைமைகளையும், பொதுசொத்துகளையும் சேதப்படுத்தியதை ஒரு தலைவராக கண்டிக்காமல், ஒவ்வொரு வார சனிக்கிழமையும் இதையே வாடிக்கையாக கொண்டு அடுத்த பணிகளை மேற்கொண்டது பொதுசொத்துகள் மீதும், தொண்டர்கள் மீதும் அக்கறையின்மையை காட்டுகிறது.

தான் செல்லும் இடங்களில் அதிகமான கூட்டம் சேருவதை விஜய் பெருமையாக எண்ணிக் கொண்டதும் இந்த பெரும் உயிர்சேதத்திற்கு ஓர் முக்கிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தாலோ அல்லது வாரத்தில் 3-4 தினங்கள் சுற்றுப்பயண திட்டத்தை காரணமாக கருத வேண்டும். அன்றாடம் மேற்கொண்டிருந்தாலோ இந்த பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டிருக்கும்.

காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அறிவுறுத்தல்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஒத்துழைப்பு தராமல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய் தான் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். இனி வருங்காலங்களில் காவல்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பும், அரசு அறிவுறுத்தும் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இணக்கமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது பிரான்சு நாட்டில் தூய லூர்து அன்னையை தரிசிக்க சென்றிருப்பதால் இந்த துயரமான சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் காண இயலாத சூழலில் வேதனையில் என் ரத்தம் உறைகிறது. துரதிர்ஷ்டவசமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டு, அவர்கள் விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்