மத்திய மந்திரி பியூஷ் கோயல் 23-ந்தேதி தமிழகம் வருகிறார் - நயினார் நாகேந்திரன் பேட்டி
நாளையே தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள தயார் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.;
தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாஜக ஆயத்த வேலைகளை செய்து வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பாஜக தலைவர்களுடன் அடிக்கடி ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.
இந்த வகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதில் தேர்தல் யுக்திகள் தொடர்பாக பேசப்பட்டது. இதனைதொடர்ந்து தமிழகத்துக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டனர்.
தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால், சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மொகல் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஷ் கோயல் வருகிற 23-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். பாஜக உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-
எனது பரப்புரைப் பயணம் ஜனவரி 9-ம்தேதி நிறைவு பெறுகிறது. பரப்புரை நிறைவுக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகை தருவார்கள். நாளையே தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள தயார். மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
5 ஆண்டு கால ஆட்சியில் திமுக சொத்து வரியை உயர்த்தியிருக்கிறார்கள். மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்திருக்கின்றன. 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன. பெண்கள் சாலையில் நடமாட முடியவில்லை. போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்திருக்கிறது.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் வருகிற 23-ந்தேதி தமிழ்நாடு வர இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.