ரெயில்வே தகவல்களை பெற அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்த வேண்டும்: பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தல்

தனியார் செயலிகளில் ரெயில்களின் புறப்பாடு, நடைமேடைகள் விவரம் உள்ளிட்டவை முன்னதாகவே அறியும் வகையில் உள்ளது.;

Update:2025-10-13 08:03 IST

சென்னை,

ரெயில் நிலையங்களில் ரெயில்கள் புறப்படும் நேரம், நடைமேடை விவரம் மற்றும் ரெயில்களின் வருகை உள்ளிட்ட பல தகவல்கள் தற்போது இணையதளம் வாயிலாகவே பெரும்பாலான பயணிகள் தெரிந்து கொள்கின்றனர். அதன்படி, இணையதளத்தில் ரெயில்வே செயலிகள் மற்றும் தனியார் செயலிகள் மூலமும் ரெயில்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதில், தனியார் செயலிகளில் ரெயில்களின் புறப்பாடு, நடைமேடைகள் விவரம் உள்ளிட்டவை முன்னதாகவே அறியும் வகையில் உள்ளது. தனியார் செயலிகள் மூலம் வழங்கப்படும் ரெயில்கள் புறப்படும் நேரம், நடைமேடை விவரம் உள்ளிட்டவை பெரும்பாலான நேரங்களில் பயணிகளை ஏமாற்றமடைய செய்வதாகவும், அதனால் ரெயில்களை தவறவிட்டும், அவசரமாக ரெயில் நடைமேடைகள் கண்டுபிடித்து ரெயிலில் ஏற முயற்சி செய்யும் நிலையும் நிகழ்வதாக குற்றச்சாட்டியுள்ளனர்.

இதுபோல தினமும் ஏராளமான பயணிகள் தனியார் செயலிகளின் தவறான தகவல்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ரெயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியபோது, “ரெயில்வே துறையால் ‘இந்தியன் ரெயில்வே என்கொயரி' ‘நேசனல் ரெயில்வே என்கொயரி' போன்ற சில செயலிகள் மூலமே ரெயில்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படுகின்றன. அவை நம்பகமான தகவல்களாகும். ஆனால், பல தனியார் செயலிகளில் பொதுவாக யூக அடிப்படையில் தகவல்களை வெளியிடுகின்றன. எனவே, ரெயில் பயணிகள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். ரெயில்வே துறையின் அதிகாரப்பூர்வ செயலிகளில் மட்டுமே தகவல் பெற பயன்படுத்த வேண்டும்' என்றார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்