உசிலம்பட்டி காவலர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கு: தேடப்பட்ட நபர் என்கவுன்ட்டர்
உசிலம்பட்டி காவலர் படுகொலை வழக்கில் குற்றவாளி பொன்வண்ணன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.;
கோப்புப்படம்
உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான, கள்ளபட்டியைச் சேர்ந்த முதல் நிலை போலீஸ்காரரான முத்துக்குமார் (40), இவர் கடந்த 27ம் தேதி பணி முடிந்து முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது, அங்கே மது அருந்திக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணனுக்கு அறிவுரை செய்துள்ளார். இதனால் இருவர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின் அங்கிருந்து வெளியே வந்த முத்துக்குமார், கள்ளபட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் அருகில் உள்ள தோட்டத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத சிலர், பின்னால் வந்து முத்துகுமாரை கல்லால் தாக்கி உள்ளனர். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் உடனிருந்த ராஜாராம் என்பவரும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், அவருக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து காவலர் முத்துகுமாரை கல்லால் அடித்து கொலை செய்தது கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து கொலை வழக்கில் பொன்வண்ணனை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். அப்போது அவர் தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அவரை கைது செய்ய போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது கைது செய்ய சென்ற போலீசாரை பொன்வண்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உசிலம்பட்டி நகர ஆய்வாளர் ஆனந்தன், பொன்வண்ணணை என்கவுன்ட்டர் செய்ததாக கூறப்படுகிறது.