நான் பதில் சொன்னால் வைகோ மனம் புண்பட்டுவிடும்: ஓ பன்னீர் செல்வம் பதிலடி
2011 சட்டமன்ற தேர்தல் கூட்டணி விவகாரத்தில் வைகோ முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.;
சென்னை
2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ‘அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்க விரும்பவில்லை' என்று ஜெயலலிதாவிடம் ஓ.பன்னீர்செல்வம் பொய் சொல்லிவிட்டார் என்று ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் வைகோ பரபரப்பு கருத்தை தெரிவித்தார். அவருடைய இந்த கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.இதுதொடர்பாக அவர், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜெயலலிதாவுடன் 25 ஆண்டுகள் உடனிருந்து பணியாற்றி இருக்கிறேன். அவர், என்ன பேச சொல்கிறாரோ, அதை மட்டும்தான் பேசி வந்திருக்கிறேன். இது அனைவருக்கும் நன்றாக தெரியும்.அண்ணன் வைகோ மீது மிகுந்த மரியாதை, அன்பு, பாசம், பற்றை இன்றைக்கும் வைத்திருக்கிறேன். எனவே அவர் என்ன பேசினாலும், அவர் மீது மரியாதையோடுதான் இருப்பேன். நான் அவருக்கு பதிலை சொன்னால் அவருடைய மனத்தை புண்படுத்தக்கூடும் என்பதால், அரசியல் நாகரீகம் கருதி நான் அந்த பிரச்சினைக்கு உள்ளே செல்ல விரும்பவில்லை.
2011-ல் நடந்த அந்த பேச்சை 14 ஆண்டுகள் கழித்து இப்போது பேசபேண்டிய நிலை அண்ணன் வைகோவுக்கு ஏன் வந்தது என்று தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து நான் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் விரும்பினால் அந்த பதிலை சொல்வேன்.செங்கோட்டையன் மற்றும் என்னை போன்ற நிர்வாகிகள் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்று அ.தி.மு.க.வில் இருக்கிற 2 கோடி தொண்டர்களும் கண்ணீர்விட்டு அழுது கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்று நாட்டின் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜனதா மேல்மட்ட தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் தனிப்பட்ட ஒருவரின் விருப்பு, வெறுப்பு இந்த இயக்கம் ஒன்றுபடுவதற்கு தடையாக இருக்கிறது. அவர், எதை அள்ளி கொண்டு செல்ல போகிறார்? என்று தெரியவில்லை. அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் பணியில் நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் எங்களிடம் நல்ல எண்ணத்துடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.