விஜய்யின் சுற்றுப்பயணம் நீட்டிப்பு.. ஞாயிற்றுக்கிழமையும் பரப்புரை செய்ய முடிவு
தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற புதிய கட்சியினை கடந்த ஆண்டு தொடங்கினார். இதன்பின்னர், கட்சிக் கொடியை அறிமுகம் செய்த அவரது தலைமையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27 அக்டோபரில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் கொள்கை தலைவர்கள் குறித்து விளக்கினார். மேலும், மத்தியில் ஆளும் பா.ஜ.க கொள்கை எதிரி எனவும், மாநிலத்தில் ஆளும் தி.மு.க. அரசியல் எதிரி எனவும் காட்டமாக பேசினார். அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு கடந்த மாதம் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. விக்கிரவாண்டியைப் போல் இந்த மாநாட்டிற்கு ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்தனர். இந்த கூட்டத்தில் பா.ஜ.க, தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை நேரடியாக விஜய் விமர்சித்தார். குறிப்பாக தி.மு.க தலைவரும் முதல்-அமைச்சருமான ஸ்டாலினை விஜய் கடுமையாக சாடியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை குறித்து வைத்து, 'உங்கள் விஜய் நான் வரேன்' எனக் குறிப்பிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர் விஜய். தனது பரப்புரையை கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கிய அவர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்து வருகிறார்.
இதன்படி கடந்த இரண்டு வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகை மற்றும் திருவாரூரில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தினார். அந்த வகையில் நாளை மறுநாள் (27ஆம் தேதி சனிக்கிழமை) நாமக்கல் மாவட்டத்திலும், கரூர் மாவட்டத்திலும் அவர் பரப்புரை செய்ய உள்ளார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் 2026 ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் டிச-20ஆம் தேதியுடன் சுற்றுப்பயணத்தை விஜய் முடிக்க இருந்த நிலையில், 2026 பிப்-21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சனிக்கிழமை மட்டும் பரப்புரை செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமையும் பிரசாரம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.