வக்பு திருத்தச் சட்ட வழக்கு: சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவு கவலையளிக்கிறது - எஸ்டிபிஐ கட்சி

வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்க்க அனுமதிக்கும் முடிவை கோர்ட்டு நிறுத்தி வைக்க மறுத்தது ஏமாற்றமளிப்பதாக எஸ்டிபிஐ கட்சி கூறியுள்ளது.;

Update:2025-09-15 21:05 IST

கோப்புப்படம் 

எஸ்டிபிஐ கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவு குறித்து எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் வக்கீல் ஷர்புதீன் அகமது ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளையும் கண்ணியத்தையும் முழுமையாகப் பாதுகாக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். சட்டத்தின் சில பிரிவுகளை மட்டும் நிறுத்தி வைத்த இந்த உத்தரவு, பல ஆபத்தான விதிகளை அப்படியே விட்டுவிட்டதாகவும், இது வக்பு அமைப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். இந்த வழக்கில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகமது ஷபி மனுதாரர்களில் ஒருவராக உள்ளார்.

வக்பு விவகாரங்களில் வரம்புச் சட்டத்தை இணைத்தல், பயனர் வக்பு ஒழிப்பு, திட்டமிடப்பட்ட பகுதிகளில் வக்பு உருவாக்குவதைத் தடை செய்தல் போன்ற விதிகள் கவலை அளிப்பதாக ஷர்புதீன் அகமது சுட்டிக்காட்டினார்.

மாநில வக்பு வாரியங்கள் மற்றும் தேசிய வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்க்க அனுமதிக்கும் முடிவை கோர்ட்டு நிறுத்தி வைக்க மறுத்தது ஏமாற்றமளிப்பதாகவும், நியாயமற்றது என்றும் அவர் தெரிவித்தார். இந்த இடைக்கால உத்தரவு பகுதி நிவாரணம் அளித்தாலும், முழுமையான தடை விதிக்கப்படாததால், சட்டத்தின் தீங்கு விளைவிக்கும் அம்சங்கள் இன்னும் நீடிக்க அனுமதிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

வக்பு சொத்துக்களை கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற விதி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வக்புகளை அகற்றுவதற்கு வழிவகுக்கும் என்பதால், இது சமூகத்தின் மீது தொங்கும் கத்தியாக உள்ளதாக ஷர்புதீன் அகமது எச்சரித்தார்.

இந்தச் சட்டத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடுவதற்கு எஸ்டிபிஐ கட்சி தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு இறுதி உத்தரவில் வக்பு திருத்தச் சட்டத்திற்கு முழுமையான தடை விதிப்பதன் மூலம் முழு நீதியை வழங்கும் என்று கட்சி நம்புவதகாவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்