உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் தாக்கப்பட்டாரா? - காவல்துறை விளக்கம்

ஆற்காடு அடுத்த சாத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.;

Update:2025-09-04 10:06 IST

சென்னை,

ராணிப்பேட்டை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின் முகாமில்" மனு அளிக்க வந்த முதியவரை போலீசார் தாக்கியதாக வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இது சம்பந்தமாக உண்மை செய்தி பின்வருமாறு:-

இந்த முகாமில் கலந்து கொண்ட சாத்தூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சாத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடபதி (வ/65) என்பவர் மனு சம்மந்தமாக வாக்குவாதம் செய்து திடீரென கிராம நிர்வாக அலுவலரை கையால் தாக்கியதுடன், அரசு பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான காணொளி பொது வெளியில் பகிரப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக அங்கு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் பிரபாகரன் என்பவர் பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக அவரை வெளியேற்றும் நோக்கில் உதவி ஆய்வாளர் குறைந்த அளவு பலத்தை பயன்படுத்தி சம்பவம் இடத்திலிருந்த அரசு அழியரை பணி செய்ய விடாமல் தடுத்த வெங்கடபதியை அமைதிப்படுத்தி அனுப்பியதாக தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தின் முழு காணொளியிலிருந்து, உதவி ஆய்வாளர் மற்றும் வெங்கடபதிக்கு இடையிலான நிகழ்வின் ஒரு பகுதியை மட்டுமே சமூக ஊடகங்களில் மிகைப்படுத்தி பரப்பி வருகின்றனர். பொதுமக்கள் இவ்வாறு பரப்பப்படும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்