வைகை அணையில் தண்ணீர் திறப்பு: அமைச்சர் ஐ.பெரியசாமி மதகை திறந்து வைத்தார்
மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது;
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் முழுவதும் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதேபோல் முல்லைப்பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. எனவே அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்தது. அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் இ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தனர். இதனைத்தொடர்ந்து விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று முதல் 120 நாட்களுக்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் 75 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், மீதம் உள்ள 45 நாட்களுக்கு தண்ணீரின் இருப்பை பொறுத்து முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது திறக்கப்பட உள்ள தண்ணீரின் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர்.