அரசு பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதா? - அதிகாரிகள் விசாரணை
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.;
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ் கோத்தகிரி பகுதியில் உள்ள அவ்வூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பள்ளியில் மாணவர்களுக்கு வழக்கம்போல் சத்துணவில் வேக வைக்கப்பட்ட முட்டை வழங்கப்பட்டது. அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சில முட்டைகளின் உள்ளே கறுப்பு நிறத்துடன், அழுகி காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பள்ளியின் பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர் ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் சத்துணவு திட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். இதையடுத்து உடனடியாக கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா உத்தரவின் பேரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு திட்டம்) பாபு மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் முட்டைகளை தண்ணீரில் போட்டும், வேக வைத்தும் சோதனை செய்து பார்த்தனர். அதில் அழுகிய முட்டைகள் இல்லை என்பது உறுதியானது. மேலும் முட்டைகள் நீண்ட நேரம் வேகவைத்த காரணத்தால் நிறம் மாறியுள்ளது தெரியவந்தது. இது குறித்த அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.