பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்.? - மருத்துவர்கள் கூறுவது என்ன.?

கும்பகோணத்தில் தினமும் 5 பேர் பாம்புகடியால் பாதிப்படும் நிலையில், அங்கு 50 நாட்களில் 151 பாம்புகள் பிடிக்கப்பட்டன.;

Update:2025-11-27 05:38 IST

கோப்புப்படம் 

தஞ்சை,

மக்கள் தொகை அதிகரித்து வருவதால் இருப்பிடங்களின் தேவைகள் அதிகரித்துள்ளது. இதற்காக சில நீர்நிலைகள், காடுகள், வயல்கள் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. காடுகள், நீர்நிலைகள், வயல் பகுதிகளை அழித்து குடியிருப்புகளை கட்டும்போது எண்ணற்ற விலங்குகள், பூச்சிகள், பறவைகள், பாம்புகள் தங்கள் குடியிருப்பை இழக்கின்றன.

தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. பருவ மழை தொடங்குவதற்கு முன்பு இருந்தே மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வயல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.

இவ்வாறு சுற்றித்திரியும் பாம்புகள் அந்த வழியாக செல்பவர்கள் மற்றும் பாம்புகளை துன்புறுத்துபவர்களை கடித்து விடுகின்றன. பாம்பு கடிப்பட்டவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சோ்ந்து விடுகின்றனர். கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் ஒரு நாளில் 4 முதல் 5 பேர் வரை பாம்பு கடியால் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களை டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

பாம்பு கடி சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளன. பாம்பு கடித்தவுடன் பதற்றப்படக் கூடாது. அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும்.

பாம்பு கடித்த இடத்தில் அணியப்பட்டுள்ள அணிகலன்களை (மோதிரங்கள், வளையல்கள், கைக்கடிகாரங்கள், கொலுசுகள்) கழற்றிட வேண்டும். உடல் மற்றும் பாம்பு கடித்த இடத்தை அசைக்காமல் வைத்திருக்க வேண்டும். பாம்பு கடித்த இடத்தில் எதையும் கட்டக்கூடாது. பாம்பு கடித்த இடத்திற்கு பக்கத்தில் வெட்டவோ வாயால் உறிஞ்சி எடுக்கவோ கூடாது. நேரத்தை வீணடிக்காமல் உடனே ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாம்புகள் பிடிபடுவது குறித்து தீயணைப்பு துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

கும்பகோணம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 90 பாம்புகளும், இந்த மாதம் (நேற்று) வரை சுமார் 61 பாம்புகள் என 50 நாட்களில் 151 பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளன. பெரும்பாலும் சாரை பாம்பு, நல்லபாம்பு, தண்ணீர் பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்ட பாம்புகள் தான் அதிகளவில் பிடிபடுகின்றன.

வீடுகளுக்குள் பாம்பு இருப்பது தெரியவந்தால் உடனே 0435 2431101, 112 ஆகிய எண்கள் மூலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டுவிடுவார்கள். பாம்பை யாரும் அடிக்க முயற்சி செய்யவேண்டாம். விலகி நின்றி கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Tags:    

மேலும் செய்திகள்