'போலீசார் சிவில் வழக்குகளில் ஏன் தலையிடுகின்றனர்?' - ஐகோர்ட்டு கேள்வி
சிவில் வழக்குகளில் போலீஸ் தலையிடக்கூடாது என டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.;
மதுரை,
சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைக்குட்பட்ட மாவட்டங்களில், சிவில் வழக்குகளில் காவல்துறையினர் தலையீடு செய்வதாகவும், அதற்கு தடைவிதிக்க உத்தரவிடக்கோரியும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி புகழேந்தி விசாரணை செய்து வருகிறார்.
இது தொடர்பாக கடந்த முறை நடந்த விசாரணையின்போது நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக, "ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு சிவில் வழக்குகளில் காவல்துறையினர் தலையீடு செய்யக்கூடாது என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும், தமிழ்நாடு காவல்துறை தலைவரின் (டி.ஜி.பி.) சுற்றறிக்கையின்படி, சிவில் வழக்குகளில் போலீசார் தலையிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், போலீசார் தொடர்ந்து சிவில் வழக்குகளில் ஏன் தலையீடு செய்து வருகின்றனர்? இதுகுறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்று உள்துறைச் செயலர் மற்றும் டி.ஜி.பி. பதிலளிக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, இந்த அனைத்து வழக்குகளும் இன்று மீண்டும் நீதிபதி புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, "சிவில் வழக்குகளில் போலீஸ் தலையிடக்கூடாது என காவல்துறை தலைவர் (டி.ஜி.பி.) ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதையும் மீறி சில காவல்துறையினர் தலையீடு செய்வது வருத்தத்திற்குரியது. ஒரு சிலர் மட்டுமே இதுபோல் நடந்து கொள்கின்றனர். எனவே, இந்த குறைபாடுகளை எவ்வாறு சரி செய்ய முடியும் என்பது குறித்து தமிழக காவல்துறை தலைவருடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, ஐ.ஜி. அந்தஸ்தில் இருக்கும் மூத்த காவல்துறை அதிகாரி, மூத்த கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட இருக்கிறது" என்று தெரிவித்தார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.