காவலர்களுக்கு சங்கங்கள் இல்லாதது ஏன்? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சங்கங்கள் இருக்கையில் காவல்துறையினருக்கு மட்டும் ஏன் சங்கங்கள் இல்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update:2025-04-21 21:05 IST

கோப்புப்படம் 

மதுரை ஆஸ்டின்பட்டியைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், "தமிழ்நாட்டில் காவலர்கள் அதிக பணிச்சுமை காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். 2021-ம் ஆண்டு காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அந்த அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு லட்சத்து 20 ஆயிரம் காவலர்கள் இருக்கும் நிலையில், ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்திருப்பது பாராட்டத்தக்கது என்று நீதிபதி கூறினார். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் உள்ளது. ஆனால் இங்கு மட்டும் போலீசாருக்கு இதுவரை சங்கம் இல்லாதது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், தனியார் தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் சங்கங்கள் இருக்கையில் காவல்துறையினருக்கு மட்டும் ஏன் சங்கங்கள் இல்லை? இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மனுதாரர் விளம்பர நோக்கத்திற்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, 2021-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லையெனில் அந்த அரசாணையும் விளம்பர நோக்கத்திற்காக பிறப்பிக்கப்பட்டது எனக் கூற இயலுமா? என்று கேள்வி எழுப்பினார்.

முதல்வரின் உத்தரவுகளை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லையா? காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணையை உயர் அதிகாரிகள் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்