பெஞ்ஜல் புயலால் உருக்குலைந்த மனைகளை அளவீடு செய்யும் பணி தொடங்கியது

கடந்த டிசம்பர் 2-ந் தேதி விழுப்புரம் மாவட்டத்தை பெஞ்சல் புயல் தாக்கியதால் சூறாவளி காற்றுடன் இடைவிடாது பெரு மழை பெய்தது.;

Update:2025-07-02 15:43 IST

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் உள்ள மலட்டாறு ஓரமாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் 2-ந் தேதி விழுப்புரம் மாவட்டத்தை பெஞ்சல் புயல் தாக்கியதால் சூறாவளி காற்றுடன் இடைவிடாது பெரு மழை பெய்தது. இதனால் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோரமாக உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் குடியிருப்புகளுடன் 5 தெருக்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

இதனால் அந்த பகுதி இருக்கும் இடம் தெரியாமல் மேடு, பள்ளமாக காட்சி அளித்தது. யாருடைய மனை எங்கே இருந்தது என்று தொியாமல் அங்கு வசித்து வந்தமக்கள் பரிதவித்து வந்தனர். தெருக்கள் உருக்குலைந்ததால் ஊருக்குள் வந்து செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெஞ்ஜல் புயலில் உருக்குலைந்த மனை மற்றும் சாலை, தெருக்களை அளவீடு செய்து சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்து வந்தனர். இதுபற்றிய செய்தி படத்துடன் 'தினத்தந்தி'யில் நேற்று முன்தினம் வெளியானது.

இந்த விவகாரம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மானின் கவனத்துக்கு வந்ததை அடுத்து அவரது உத்தரவின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் அதிகாரிகள் நேற்று இருவேல்பட்டு கிராமத்துக்கு வந்து பெஞ்ஜல் புயலில் உருக்குலைந்த தெருக்களை பார்வையிட்டு 4 தெருக்களில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கைகளை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல் திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் விழுப்புரம் நிலஅளவைத்துறை கோட்ட ஆய்வாளர் சண்முகம், அரசூர் வருவாய் ஆய்வாளர் ரஞ்சனி, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகா, நில அளவையர் அன்பரசன், ஜெயசீலன் மற்றும் வருவாய் துறையினர் புயலில் சேதம் அடைந்த ஒவ்வொரு வீட்டு மனைகளையும், 4 தெருகளையும் அளவீடு செய்தனர். இதில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்ததை கண்டறிந்த அதிகரிகள் அதை அகற்றி சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்