சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூடுதலாக 89 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
சந்தேகத்துக்கிடமான நபரின் ஒவ்வொரு அசைவுகளும் கேமராக்களில் தெளிவாக பதிவாகும்.;
சென்னை,
சென்னையின் முக்கிய அடையாளமாகவும், முக்கிய ரெயில் முனையமாகவும் திகழும் சென்டிரல் ரெயில் நிலையத்தில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 134 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆனாலும் இதில் பல கேமராக்கள் பழுதாகியும், பயனற்ற நிலையிலும் இருக்கின்றன.
திடீரென குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் கூட, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்க்கும் போலீசாருக்கு ‘நம் கண்கள் சரியில்லையோ...' என்ற ரீதியில் கண்ணை தேய்த்து தேய்த்து பார்க்க வேண்டியுள்ளது. அந்தளவு மங்கலாக காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. இதற்கு காரணம், கண்காணிப்பு கேமராக்களின் லென்ஸ்கள் பழுதாகி இருப்பதால் தான்.
சமீப காலமாக ரெயில் நிலைய வளாகங்களில் பல அத்துமீறல்களும், அடாவடி போக்குகளும் நடந்து வருவது பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் இருக்கும் கேமராக்களின் பழுதை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், கூடுதலாக கேமராக்களை நிறுவ வேண்டும் என்றும் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வலுத்தது.
அதன்படி, சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட இருக்கின்றன. இதற்காக தெற்கு ரெயில்வேயின் தொலைத்தொடர்பு துறை சார்பில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து ரெயில்வே நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்டிரல் ரெயில் நிலையத்தில் கஞ்சா கடத்தல், குழந்தை கடத்தல், செல்போன் மற்றும் நகை திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை விரைவில் கண்டறிந்து கைது செய்யவும், பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. அதன்படி, ரெயில் நிலையத்தில் கூடுதலாக 89 அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 134 கேமராக்களும் தூசு தட்டப்பட்டு, அதிநவீன கேமராக்களாக மாற்றப்படுகிறது. இந்த கேமராக்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் சந்தேகத்துக்கிடமான நபரின் ஒவ்வொரு அசைவுகளும் கேமராக்களில் தெளிவாக பதிவாகும். அவரது குரலும் கேட்கமுடியும். இந்த அதீநவீன கேமராக்கள் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இனி எந்த குற்றவாளிகளும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.