ஒரே நாளில் 3 முறை தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி.. 4-வது தடவை மேம்பாலத்தில் இருந்து குதித்த போது நடந்த விபரீதம்
ஒரே நாளில் 3 முறை தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி 4-வது தடவை ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார்.;
கோப்புப்படம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா அல்லியந்தல் பகுதியை சேர்ந்தவர் லூக்காஸ் (வயது 45), தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்தபோது தனது கழுத்தை அறுத்து கொண்டதாக தெரிகிறது. பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கழுத்தில் 15 தையல் போடப்பட்டது. திடீரென அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
பின்னர் அவர் மருத்துவமனை எதிரில் உள்ள திருவண்ணாமலை புறவழி சாலைக்கு சென்று அந்த வழியாக சென்ற ஒரு பஸ்சில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார்.
இதையடுத்து அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்துக்கு சென்றார். அந்த சமயத்தில் போளூரில் இருந்து கண்ணாடி லோடு ஏற்றி கொண்டு கன்னியாகுமரி நோக்கி சென்ற லாரியில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதை கண்டதும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்தினார். அப்போது அந்த லாரியின் பின்புறம் வேலூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி டைல்ஸ் லோடு ஏற்றி சென்ற லாரி, முன்னே சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் 2 லாரியிலும் சேதம் ஏற்பட்டது.
தொடர்ந்து லூக்காஸ் யாரும் எதிர்பாராத சமயத்தில் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.