வாலிபர்- பெண் வெட்டிக்கொலை - கோவில்பட்டியில் பயங்கரம்
இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சோந்தவர் ஆனந்தன் மகன் பிரகதீஷ் (வயது 21). இவர் நேற்று நள்ளிரவில் கோவில்பட்டி - கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பிரகதீஷை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது.
தகவல் அறிந்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் கோவில்பட்டி செண்பகாநகர் 3-வது தெருவை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது வீட்டுக்குள் மர்ம கும்பல் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த பாஸ்கரன் மனைவி கஸ்தூரியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கஸ்தூரியின் சகோதரர் செண்பகராஜ் கும்பலை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் வெட்டு விழுந்தது. இதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் செண்பகராஜை மீட்டு கோவில்பட்டி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைத்து சென்று விசாரணை நடத்தி கொலை செய்யப்பட்ட கஸ்தூரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கொலை செய்யப்பட்ட கஸ்தூரி அதே பகுதியில் தட்டச்சு நிலையம் மற்றும் இ-சேவை மையம் நடத்தி வந்தார். இவரது மகன் சதிஷ்சுக்கும், கொலை செய்யப்பட்ட பிரகதீசுக்கும் இடையே ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதலும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகதீஷ் தனது நண்பர் திருமண விழாவுக்காக டிஜிட்டல் பேனர் வைத்து உள்ளார். அதில் பிரகத்தீசின் படத்தை சிலர் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். இதற்கு சதீஷ் தரப்பினர்தான் காரணம் என பிரகதீஷ் கூறி வந்துள்ளார். இந்நிலையில் தான் நேற்று இரவு டாஸ்மாக் கடை அருகே வந்த போது அங்கு சதீஷ் அவரது நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பிரகதீஷை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.