சுதேசி; வார்த்தையில் இருந்து வாழ்க்கைக்கு!

டிரம்ப் 25 சதவீதம் வரி என்று அறிவித்த மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி சுதேசி கோஷத்தை மக்களிடையே பறைசாற்றினார்.;

Update:2025-08-07 05:46 IST

இந்தியாவில் ‘சுதேசி’ என்ற வார்த்தை சுதந்திர போராட்டத்தில் இருந்து ஒலிக்க தொடங்கியது. ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய நேரத்தில் காந்தியடிகள் இந்தியாவில் தயாரித்த பொருட்களையே மக்கள் வாங்கவேண்டும் என்ற நோக்கில் சுதேசி இயக்கத்தை தொடங்கினார். அதனால்தான் கப்பலோட்டிய தமிழன் என்று வரலாறு புகழ்பாடிக்கொண்டு இருக்கும் வ.உ.சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடியில் சுதேசி கப்பலை ஓட்டி ஆங்கிலேயருக்கு பெரும் சவாலாக விளங்கினார்.

சுதந்திர போராட்டத்தில் இது முக்கிய அம்சமாக விளங்கியதோடு, இன்றளவும் பேசப்படுகிறது. பின்பு நெருக்கடி நிலை நேரத்தில் ‘இந்தியனாக இரு, இந்திய பொருட்களையே வாங்கு’ என்ற கோஷம் எழுந்தது. பின்பு இந்த கோஷம் மங்கிவிட்டது. இப்போதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, வெளிநாட்டு கம்பெனிகளின் குளிர்பானங்களை வாங்குவதற்கு பதிலாக, மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருகிறார்.

இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்து விட்டு, நேற்று திடீரென 50 சதவீதம் வரி என்ற அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் டிரம்ப், முதலில் 25 சதவீதம் என்று அறிவித்த மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி சுதேசி கோஷத்தை மக்களிடையே பறைசாற்றினார்.

அவர், “நாம் அனைவரும் சுதேசி பொருட்களையே வாங்குவோம், நமது கடைகளிலும், மார்க்கெட்டுகளிலும் சுதேசி பொருட்களையே விற்போம் என்று சபதம் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தியா உலகில் 3-வது பெரிய பொருளாதார நாடாகவேண்டும் என்று விரும்பினால், இந்தியாவில் தயாராகும் பொருட்களையே வாங்கவேண்டும்.

விவசாயிகள், சிறு தொழில்கள் நலன் மற்றும் வேலைவாய்ப்பை தன்னுடைய தலையாய பணியாக மத்திய அரசாங்கம் கருதி அந்த இலக்கை நோக்கி செல்லத்தான் அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறது. இந்திய மக்களுக்கு ஒரே ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறேன். நாம் எந்த பொருளை வாங்கினாலும் இந்த பொருளை உற்பத்தி செய்ய யாராவது இந்தியர் உழைத்து இருக்கிறாரா? நம் மக்களின் வியர்வையால் உருவானதா இது? நம் மக்களின் திறனால் செய்யப்பட்டதா இது? இது சுதேசி பொருளா? என்று கேட்டுக்கொள்ளவேண்டும். உள்ளூர் பொருட்களுக்காகவே குரல் என்பதையே தாரக மந்திரமாகக்கொள்ளவேண்டும்” என்றார்.

உள்ளூர் பொருட்களை அனைவரும் வாங்கினால் நிச்சயமாக உற்பத்தி பெருகும், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். தனிநபர் வருமானமும், அரசின் வருமானமும் பெருகும். ஆனால் மக்களின் தேவைக்கான அனைத்து பொருட்களும் உள்ளூர் தயாரிப்பில் கிடைக்கவும், வெளிநாட்டு பொருட்களின் தரத்துக்கு இணையாக இருப்பதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும். பொருட்கள் மட்டுமின்றி நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்ப சேவைகளும் உள்ளூர் நிறுவனங்களை சார்ந்ததாகவே இருக்கவேண்டும். சீனாவில் கூகுளுக்கு பதிலாக பைது, சோகோ-வைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

அதுபோல அங்கு பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது இல்லை. அதற்கு பதிலாக அவர்கள் நாட்டு தயாரிப்பான வீ-சாட், வீபோ, கியூகியூ போன்றவற்றைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதுபோல ஜிமெயில், இன்ஸ்டாகிராம், அமேசான் ஆகியவற்றுக்கும் மாற்று வைத்திருக்கிறார்கள். சீனாவை போன்று இந்தியாவிலும் இதுபோல அனைத்துக்கும் இந்திய தயாரிப்பில் மாற்று இருக்கிறது. உதாரணமாக வாட்ஸ் அப்-க்கு பதிலாக இந்திய அரசின் ‘சாண்டஸ்’ என்ற மெசஞ்சரே இருக்கிறது.

ஆனால் அதனை மிக குறைவானவர்களே பயன்படுத்துகின்றனர். ‘ஜி-பே’ மூலமாக பண பரிவர்த்தனை செய்வதற்கு பதிலாக மத்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ‘பிம்’ (BHIM) செயலியை பயன்படுத்துபவர்கள், அதன் சேவை சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். எனவே சுதேசி பொருட்கள், சேவைகளெல்லாம் அனைவராலும் பயன்படுத்தப்படவேண்டும். அதன் தரமும் நிறைவாக இருக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்