சித்தாந்த போரில் வெற்றி பெற்ற தமிழர்
ஒரே தொகுதியில் அடுத்தடுத்து நடந்த மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உண்டு.;
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி துணை ஜனாதிபதி என்பவர் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த பதவி பார்ப்பதற்கு அலங்கார பதவியாக தெரிந்தாலும் பொறுப்புகள் அதிகம் இருக்கிறது. துணை ஜனாதிபதியாகவும், மாநிலங்களவை தலைவராகவும் பதவி வகிக்கும் இவர் கட்சி சார்பற்றவராகவும், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் பொதுவானவராகவும் செயல்படவேண்டும்.
14-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்ற காரணம் இதுவரையில் யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில், 15-வது துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் களம் இறக்கப்பட்டார்.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில், கட்சி சாராத சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டார். சி.பி.ராதாகிருஷ்ணனை பொறுத்தமட்டில் முழுக்க முழுக்க பா.ஜனதா கட்சி கொள்கைகளில் ஊறியவர். 1957-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திருப்பூரில் பிறந்த அவர், தன்னுடைய இளம்வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும், தொடர்ந்து ஜன சங்கத்திலும் பணியாற்றினார். அதன்பிறகு பா.ஜனதாவில் மிக தீவிரமாக கட்சி பணியாற்றினார்.
தமிழக பா.ஜனதாவில் ஒரே தொகுதியில் அடுத்தடுத்து நடந்த மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உண்டு. 2003 முதல் 2006 வரை தமிழக பா.ஜனதா தலைவராக பணியாற்றினார். இவருக்கு அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் நண்பர்கள் என்பதால் கோயம்புத்தூர் வாஜ்பாய் என்று அழைக்கப்படுகிறார். ஜார்கண்ட் மற்றும் மராட்டிய மாநில கவர்னராக பணியாற்றியவர். சர்ச்சைக்கு இடம் இல்லாத கவர்னராக இருந்தார்.
இந்தியா கூட்டணி வேட்பாளரான தெலுங்கானாவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி நேர்மையான நீதிபதியாக அறியப்பட்டதோடு, பல பரபரப்பு தீர்ப்புகளையும் வழங்கியவர். கட்சிகளுக்கு இருக்கும் பலத்தை கணக்கிட்டால் சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி உறுதி என்று தெரிந்தும், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சியும், சுதர்சன் ரெட்டியும் இந்த தேர்தலை சித்தாந்த போர் என்று பிரகடனப்படுத்தினர். இரு அவைகளிலும் உள்ள தகுதிபெற்ற வாக்காளர்களின் இப்போதைய எண்ணிக்கை 781 ஆகும். இதில் 767 உறுப்பினர்கள் மட்டுமே ஓட்டெடுப்பில் கலந்துகொண்டனர்.
7 உறுப்பினர்களை கொண்ட ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம், 4 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி மற்றும் 1 உறுப்பினரை கொண்ட பஞ்சாப்பை சேர்ந்த சிரோன்மணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணித்தன. ஓட்டுபோட்ட 767 எம்.பி.க்களில் 15 எம்.பி.க்களின் ஓட்டுகள் செல்லாதவை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்போதைய நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 427. ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 4 மக்களவை உறுப்பினர்களும், 7 மாநிலங்களவை உறுப்பினர்களும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்குத்தான் ஓட்டுபோட்டனர்.
அப்படி பார்த்தால் சி.பி.ராதாகிருஷ்ணன் 438 ஓட்டுகள்தான் பெற்றிருக்கவேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து 14 ஓட்டுகள் கிடைத்துள்ளதால் அவர் 452 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். 315 வாக்குகள் உறுதியாக பெறுவார் என்று கணக்கிடப்பட்ட சுதர்சன் ரெட்டி 300 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். 14 எம்.பி.க்கள் கட்சி மாறி ஓட்டுபோட்டதும், 15 ஓட்டுகள் செல்லாததாக இருந்ததும் அதிர்ச்சியான செய்தியாகும்.
துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் இந்த பொறுப்பை அலங்கரிக்கும் 3-வது தமிழர் ஆவார். ஆர்ப்பாட்டம் இல்லாத, அனைவரிடமும் நட்புறவோடு பழகும் குணம் கொண்ட அவருடைய பதவி காலத்தில் மாநிலங்களவை முத்திரை பதிக்கும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாகும்.