நல்லிணக்கத்திற்கு போகும் பாதை தூரமே
கலவரம் தொடங்கி இரண்டரை ஆண்டுகளுக்கு பின், கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றார்.;
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்தி இனத்தவர் தங்களை மலை வாழ் (எஸ்.டி.) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால் அதற்கு அங்குள்ள குகி என்ற மலை வாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதனால் கடந்த 2023-ம் ஆண்டு இருதரப்பு மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. வீடுகள், வணிக தலங்கள், பொது சொத்துகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறை கட்டுக்கடங்காமல் போகவே துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இந்த மோதலில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் வசிக்க முடியாமல் நிவாரண இல்லங்களில் கடும் நெருக்கடிக்கு இடையே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் அங்கு ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.
பிரதமர் 11 ஆண்டுகளாக மணிப்பூர் செல்லாத நிலையில் கலவரம் தொடங்கிய பிறகும் கூட, அங்கு போகாததை கண்டித்து நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சன குரல்களை எழுப்பின. இந்த கலவரம் தொடங்கி 2½ ஆண்டுகளுக்கு பின், கடந்த வாரம் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றார். அவர் அங்கிருந்து குகி மக்கள் வசிக்கும் சூரசந்த்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்வதாக இருந்தது.
ஆனால் பலத்த மழை காரணமாக மோடி, காரிலேயே 61 கிலோமீட்டர் தூரத்துக்கு அதுவும் மலைப்பகுதியில் கொட்டும் மழைக்கிடையே பயணம் சென்றார். சூரசந்த்பூரில் கூடியிருந்த பெரும் கூட்டத்தில் மோடி பேசும்போது, “வளர்ச்சி திட்டங்களுக்காக அமைதி நிலவ வேண்டும், மறுவாழ்வு திட்டங்கள், உள்ளாட்சி நிர்வாகம், உள்கட்டமைப்பு வசதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு’’ ஆகியவை தொடர்பாக 6 முக்கிய கருத்துகளே இடம் பெற்றன. அதோடு அவரது பேச்சு முழுவதுமே இருபிரிவினரின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலேயே இருந்தது.
மேலும் அவர் குகி மக்கள் வாழும் மலைப்பகுதிகளின் மேம்பாட்டுக்காக ரூ.7,300 கோடியும், மெய்தி மக்கள் வாழும் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களையும் அறிவித்தார். குகி மக்களின் மலைப்பகுதிகளில் உள்ள 7 பாஜக எம்.எல்.ஏ.க்கள் உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்து கொடுத்த மனுவில், “தங்கள் பகுதியை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்து தனி சட்டசபை வேண்டும். நாங்கள் நல்ல அண்டை வீட்டுக்காரர்களாகத்தான் அமைதியாக வாழ முடியுமே தவிர ஒரே குடையின் கீழ் மீண்டும் வாழ முடியாது’’ என்று கூறியுள்ளனர். இந்த பகுதியில் இரு சமூகத்தினரிடையே அமைதியை ஏற்படுத்துவது எளிதான காரியம் அல்ல. அதற்கு நீண்ட தூரம் போக வேண்டும்.
முதலில் அவர்களுக்குள் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். அதற்கு இரு தரப்பு மக்களும் எதிர் எதிரே அமர்ந்து பேச ஒரு கூட்டம் அல்ல, பல கூட்டங்களை மத்திய அரசாங்கம் நடத்த வேண்டும். இருதரப்பினர் இடையே உள்ள பிரிவு உணர்வு பள்ளிக்கூடங்கள், கடைத்தெருக்கள், வழிபாட்டுத்தலங்கள், ஏன் அரசு அலுவலகங்கள் என்று சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊடுருவி விட்டது. பிரதமர் மோடியின் மணிப்பூர் சுற்றுப்பயணத்தை ஒரு நல்ல தொடக்கமாக எடுத்துக்கொண்டு மத்திய அரசாங்கம் இரு சமுதாயங்களையும் நல்லெண்ண பாதைக்கு கொண்டு வந்தால்தான் மணிப்பூரை அமைதியாக்க முடியும்.