இதுதான் தங்கம் விலை உயர காரணம்
டாலருக்கு பதிலாக தங்கமே உலக வர்த்தகத்தின் அடிப்படை ஆகும் என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.;
உலகின் தொடக்க காலங்களில் தங்கத்தைக் கொண்டு தான் நாணயம் தயாரிக்கப்பட்டது. 1919-ம் ஆண்டிலிருந்து தங்கத்திற்கு என விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டது. 1944-ல் அமெரிக்க டாலர் மதிப்பில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக போடப்பட்ட ஒப்பந்தம் பிரெட்டன் உட்ஸ் ஒப்பந்தம் எனப்படுகிறது. இதன்படி ஒரு அவுன்ஸ், அதாவது 31.10 கிராம் (ஒரு பவுன் - 8 கிராம்) 24 காரட் தங்கத்தின் விலை 35 டாலராக நிர்ணயிக்கப்பட்டது. அப்போது இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு அவுன்ஸ் விலை வெறும் ரூ.103 மட்டுமே. அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.3.32 ஆக இருந்தது.
1971-ம் ஆண்டு வரை இந்த நடைமுறை நிலவியது. அதே ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன், பிரெட்டன் உட்ஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்து, டாலருடன் இணைக்கப்பட்ட தங்கத்தின் விலையை நடைமுறையில் இருந்து நீக்கினார். அன்று முதல் தங்கத்தின் விலை சந்தையின் அடிப்படையில் தினந்தோறும் மாறத் தொடங்கியது. தங்கம் விலை வேகமாக உயரத் தொடங்கியதற்கான ஆரம்பம் அதுவே. அப்போது ஒரு கிராம் 24 காரட் தங்கம் ரூ.3.32 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.91,080 என கற்பனைக்குப் புலப்படாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. இந்தியாவை பொறுத்தவரை தங்கமே செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
இந்திய குடும்பங்களில் மட்டும் தற்போது 25 ஆயிரம் டன்னுக்கும் மேற்பட்ட 22 காரட் தங்கம் இருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறுகிறது. இன்றைய சந்தை மதிப்பில் இது ரூ.188 லட்சம் கோடியாக மதிப்பிடப்படுகிறது. இங்கு ஏழை வீடாக இருந்தாலும், சிறிது ‘பொட்டு தங்கம்’ கண்டிப்பாக இருக்கும். இப்போது வீடுகளில் மட்டுமல்ல, அரசாங்கங்களும் தங்கத்தை வாங்கி கையிருப்பில் வைத்துக் கொள்கின்றன. உலக வரலாற்றிலேயே 2022-ம் ஆண்டு தான் நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கிய வருடமாகும். இதுமட்டுமல்லாமல், நாடுகளில் ‘நாம் ஏன் அமெரிக்க டாலரை அடிப்படையாக வைத்து வர்த்தகம் நடத்த வேண்டும்? தங்கத்தை அடிப்படையாக வைத்து பரிமாற்றங்களை நடத்தக்கூடாதா?’ என்ற உணர்வு உருவாகத் தொடங்கியுள்ளது.
ரஷியா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா மற்றும் இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவைகள் அனைத்தும் நாடுகளை தங்கத்தை வாங்கி குவிக்கத் தூண்டி வருகின்றன. எதிர்காலத்தில் அனைத்து நாடுகளும் தங்களது ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளன.
இந்த கருத்தை முன்னெடுத்து வரும் ரஷியாவில், தங்கத்தை அவர்களின் மொழியில் ‘ஜோலதோ’ என்று அழைக்கிறார்கள். அதனால் இப்போது உருவாகும் முழக்கம்: ‘டாலருக்கு பதிலாக ஜோலதோ’. அதாவது, டாலருக்கு பதிலாக தங்கமே உலக வர்த்தகத்தின் அடிப்படை ஆகும் என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையால், அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி கையிருப்பில் வைத்துக் கொள்ளத் தொடங்கியதால், நிச்சயமாக மக்கள் வாங்கும் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை விரைவில் எட்டத்தான் செய்யும்.