ஒரு கதவு மூடினால் பல கதவுகள் திறக்கும்

எச்-1பி விசா கட்டண உயர்வு இந்தியாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-09-25 05:02 IST

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பல இளைஞர்களின் கனவே எச்-1பி விசா வாங்கி அமெரிக்காவில் போய் வேலை பார்க்கவேண்டும் என்பதுதான். ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதில் இருந்தே இந்தியாவுடன் உள்ள உறவில் சற்று விரிசல் ஏற்படும் வகையில் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து ஏற்றுமதிக்கு முட்டுக்கட்டை போட்ட அவருடைய பார்வை இப்போது எச்-1பி விசா மீது விழுந்துவிட்டது. அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் எச்-1பி விசா கட்டணமாக ரூ.1.32 லட்சம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.88 லட்சம் கட்டவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த திடீர் உயர்வு இந்தியாவுக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டாலர் கணக்கில் இந்த கட்டணம் ஒரு லட்சம் டாலராக இருக்கிறது. அமெரிக்காவில் புதிதாக வேலைக்கு செல்பவர்களுக்கு பெரும்பாலும் இந்த கட்டணத்தைவிட குறைவான சம்பளமே இருக்கிறது. 25 சதவீதம் பேர் ஆண்டுக்கு 77 ஆயிரம் டாலரே சம்பளமாக பெறுகிறார்கள். சற்று பணி அனுபவமும் திறன் மிகுதியும் உள்ளவர்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் வரை பெறுகிறார்கள். இந்த நிலையில், இப்போது அறிவிக்கப்பட்ட ரூ.88 லட்சம் எச்-1பி விசா கட்டணம் அமெரிக்காவுக்கு போய் வேலை பார்க்கவேண்டும் என்ற இளைஞர்களின் கனவு கதவை மூடிவிட்டது என்றாலும் ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கப்படும் என்ற பழமொழிப்படி இப்போது ஒரு கனவல்ல மற்றும் பல நாடுகளில் இருந்து கனவு கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கு அடுத்த வல்லரசு நாடான சீனா கடந்த மாதம் அறிவித்து அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் கே-விசா இந்தியா உள்பட அனைத்து நாட்டு இளைஞர்களின் பார்வையையும் இழுத்துவிட்டது. இந்த விசாவுக்கு அங்குள்ள நிறுவனங்கள் அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங் மற்றும் கணித பாடங்களில் பட்டம் பெற்ற மிகவும் திறமைவாய்ந்த சர்வதேச இளைஞர்களை தங்கள் நாட்டில் பணி புரிய ஈர்ப்பதே இந்த கே-விசாவின் முக்கிய நோக்கமாகும். இந்த விசாவை பெற்றவர்கள் அங்கு போய் வேலை தேடிக்கொள்ளலாம், அந்த நாட்டுக்கு கட்டுப்பாடின்றி சென்று வரலாம். நீண்ட நாட்கள் தங்கலாம்.

இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, உலகம் முழுவதிலும் பல்வேறு துறைகளில் உள்ள திறமை வாய்ந்தவர்களை இங்கு வந்து பணியாற்ற சீனா அழைக்கிறது என்று வரவேற்றுள்ளார். சீனா மட்டுமல்லாமல் இங்கிலாந்தும் திறமையானவர்களை தங்கள் நாட்டுக்கு வரவழைக்க விசா கட்டணத்தை தள்ளுபடி செய்வது குறித்தும் பரிசீலனை செய்து வருகின்றன. ஆக அமெரிக்கா தன் கதவை மூடினாலும் இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, கனடா, அரபு நாடுகள் உள்பட பல நாடுகள் திறமைவாய்ந்த இந்திய இளைஞர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வேலைவாய்ப்பு வழங்க தன் கதவுகளை திறந்துவிட்டுக்கொண்டு வருகிறது. ஜோகோ கம்பெனி நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தினத்தந்தி குழுமத்தின் ஆங்கில பத்திரிகையான டி.டி.நெக்ஸ்ட்-க்கு அளித்த பேட்டியில், “எச்-1பி சகாப்தம் முடிந்தது, இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது. இதற்காக வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன” என்று கூறியதையும் கருத்தில் கொள்ள வேண்டிய நேரம் இது.

Tags:    

மேலும் செய்திகள்