தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்
வாக்காளர் பட்டியலை தயாரிக்க தேர்தல் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வை மேற்கொள்ள இருக்கிறார்கள்.;
பீகாரில் நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நாடு முழுவதும் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்தது. இந்த திருத்தத்தின்போது வாக்காளர்கள் தாங்கள் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் என்பதை நிரூபிக்க, அவர்களது பிறப்புரிமையை உறுதிப்படுத்த பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ் உள்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணத்தை தாக்கல் செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பட்டியலில் ஆதார் இல்லாதது நாடு முழுவதும் எதிர்ப்பை கிளப்பியது. இப்போது சுப்ரீம் கோர்ட்டு ஆதார் அடையாள அட்டையையும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் பீகாரில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட இந்த தீவிர திருத்தத்தின் பணிகள் முடிந்து கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி அங்கு 7.24 கோடி வாக்காளர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்த 65 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதில், 35 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் 22 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 7 லட்சம் பேர் 2 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருப்பதாகவும், ஒரு லட்சம் பேர் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை என்றும் கூறப்பட்டது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்களை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று முறையீடு மற்றும் ஆட்சேபணை விண்ணப்பங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் 2 லட்சம் பேரை நீக்கவேண்டும் என்றும், 13 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்கள் பெயரை சேர்க்கவேண்டும் என்றும் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதையெல்லாம் பரிசீலித்து புதிய வாக்காளர் பட்டியல் வருகிற 30-ந்தேதி வெளியிடப்பட இருக்கிறது.
இந்தநிலையில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களிலும் பீகாரில் நடத்தியதுபோல சிறப்பு தீவிர திருத்த பணியை தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையில் டெல்லியில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பங்கேற்றார். கூட்டத்தில், ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு அதிகமாக இல்லாததை உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதே இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கமாகும்.
எந்த குறைபாடும் இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க தேர்தல் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வை மேற்கொள்ள இருக்கிறார்கள். வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்து வந்துள்ள வாக்காளர்கள் கூடுதலாக ஒரு உறுதி மொழி படிவத்தை பூர்த்தி செய்து தாக்கல் செய்வதோடு, 1987-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதிக்கு முன்பாக இந்தியாவில் பிறந்ததை உறுதிப்படுத்தும் வகையிலான சான்றை தாக்கல் செய்யவேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால் தேவையற்ற கெடுபிடிகளை செய்யக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளபடி தகுதியான வாக்காளர்கள் விடுபட்டுவிடாமல், வாக்காளர் பட்டியலில் எந்த குறைபாடும் இல்லை என்பதை தேர்தல் ஆணையமும், தலைமை தேர்தல் அதிகாரியும் உறுதிப்படுத்தவேண்டும்.