இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்க்கிறது. நேற்றும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீட்டர், மேல்பவானியில் 30 செ.மீட்டர் கனமழை பெய்துள்ளது.
கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 21 செ.மீட்டர், நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் 18 செ.மீட்டர் கனமழை பதிவானது. தற்போது, தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி வருகிறது.
இந்நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு எச்சரிக்கை), திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வருகிற 29, 30-ந் தேதிகளில், கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களில் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு (ஆரஞ்சு எச்சரிக்கை) வாய்ப்பு உள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கோடை மழையை பொறுத்தவரையில், கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரையில், தமிழகத்தில் 22 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தின் இயல்பான அளவு 11 செ.மீட்டர் ஆகும். இதுவரை, இயல்பைவிட 94 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளது.