2 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேல்-பொலிவியா தூதரக உறவு மீண்டும் தொடக்கம் - ஒப்பந்தம் கையெழுத்து
தூதரக உறவை மீண்டும் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இஸ்ரேல்-பொலிவியா மந்திரிகள் கையெழுத்திட்டனர்.;
சுக்ரே,
இஸ்ரேல்-காசா போர் கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கியது. இந்த போரில் உலக நாடுகள் பலவும் காசாவுக்கு ஆதரவு தெரிவித்தன. அதன் ஒரு பகுதியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் உடனான தூதரக உறவை பொலிவியா முறித்து கொண்டது. மேலும் அப்போதைய அதிபர் எவோ மோராலஸ் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். எனவே அமெரிக்கா உடனான தூதரக உறவை துண்டித்து ஈரானுடன் நட்புறவை வளர்த்து கொண்டது.
இந்த சூழலில் கடந்த அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் வலதுசாரி கட்சி வெற்றி பெற்று ரொட்ரிகோ பாஸ் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் அமெரிக்கா, இஸ்ரேல் உடனான தூதரக உறவை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்தார். அதன்படி இரு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளும் அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தூதரக உறவை மீண்டும் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் அவர்கள் இருவரும் கையெழுத்திட்டனர். இதன்மூலம் இஸ்ரேல்-பொலிவியா இடையே புதிய பொருளாதார வாய்ப்புகள் திறக்கப்படும் என அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.