குழந்தை பெற்று கொள்ளும் நோக்கத்தில் சுற்றுலா விசாவில் வந்தால்... டிரம்ப் நிர்வாகம் கூறிய தகவல்
குழந்தைக்கு குடியுரிமை பெற பிரசவத்திற்காக அமெரிக்காவுக்கு செல்பவர்களுக்கு சுற்றுலா விசா கிடையாது டிரம்ப் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.;
வாஷிங்டன்,
அமெரிக்காவில் விசா தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ளார். இதற்கிடையே சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவுக்கு வந்து சிலர் குழந்தை பெற்று அக்குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெற முயற்சிப்பதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குழந்தை பெற்று கொள்ளும் நோக்கத்தில் சுற்றுலா விசா பெற முயன்றால் அவர்களுக்கு விசா கிடையாது என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சியில் அமெரிக்காவில் பிரசவம் செய்வதே பயணத்தின் முதன்மை நோக்கம் என்று அதிகாரிகள் நம்பினால் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் மறுக்கப்படும். இது அனுமதிக்கப்படாது என்று தெரிவித்து உள்ளது.