இஸ்ரேலுக்கு எதிராக வலுவான பதிலடி கொடுக்கப்படும்: கத்தார் பிரதமர்
கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.;
கத்தார்,
காசாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் அமைப்பினரை கூண்டோடு அழிக்கும் விதமாக, இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸின் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை கத்தார் அதிகாரிகளும் உறுதிபடுத்தினர்.
இந்தத் தாக்குதலில் கத்தார் பாதுகாப்பு படை வீரர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், தங்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று ஹமாஸ் தெரிவித்தது.
கடந்த 2023ம் ஆண்டு அக்.,7ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் நேற்று முன்தினம் ஜெருசலேமில் 6 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு நட்பு நாடுகளுடன் இணைந்து வலுவான பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கத்தார் பிரதமர் அல்-தானி தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் கொடுமைகள் தொடர்வதைத் தடுக்க விரைவில் அரபு-இஸ்லாமிய உச்சி மாநாடு நடைபெறும் என்றும், அதில் பதில் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.