‘அடுத்து யாரை சிறைபிடிக்க வேண்டும் என்பது அமெரிக்காவுக்கு தெரியும்’ - ஜெலன்ஸ்கி

வெனிசுலா நாட்டின் அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார்.;

Update:2026-01-04 11:33 IST

கீவ்,

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வந்தார். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாக டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதனிடையே, வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறி பல்வேறு கப்பல்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை முறியடிப்போம் என சூளுரைத்தார்.

இந்த சூழலில், வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வெனிசுலா நாட்டின் அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்திருந்தார். மேலும், வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்டது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, “சர்வாதிகாரிகளை இப்படி கையாள முடியும் என்றால், அடுத்து யாரை சிறைபிடிக்க வேண்டும் என்பது அமெரிக்காவுக்கு தெரியும்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்