வங்காளதேச விமான விபத்து;பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 31 ஆக உயர்ந்து உள்ளது.;
Photo Credit: AP
டாக்கா,
வங்காளதேசத்தில் விமானப்படைக்குச் சொந்தமான எப்.7 பி.ஜி.ஐ. விமானம் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்துக்கு உள்ளானது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து டாக்கா அருகே உத்தாரா பகுதியில் பள்ளி மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது.இந்த விபத்தில் விமானத்தில் இருந்த விமானி மற்றும் மாணவர்கள் 20 பேர் பலியானார்கள். விபத்தில் இறந்த விமானியின் பெயர் லெப்டினன்ட் முகமது டோகிர் இஸ்லாம் என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 31 ஆக உயர்ந்து உள்ளது. காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை உயர்ந்தது. பலியானவர்களில் 25 பேர் மாணவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காயம் அடைந்து சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை் 165 ஆக உள்ளது. அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் இருக்கிறது. விபத்தில் சிக்கிய குழந்தைகளின் உடல்களைத் தேடி அவர்களின் பெற்றோர் ஆஸ்பத்திரிகளில் அலைமோதிய காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்தது.
இந்த நிலையில் விபத்து மற்றும் பலியானவர்கள் பற்றிய துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் அருகில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய வங்கதேச விமானப்படையால் உயர் மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.