இந்திய சமூகத்தினரின் உற்சாக வரவேற்பால் அகமகிழ்ந்தேன்: பிரதமர் மோடி
இந்திய தேசிய கொடிகளை ஏந்தியபடி பெண்கள், சிறுமிகள் என பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.;
லண்டன்,
பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். இதில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் உள்பட பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருடைய இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதுடன், இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசையும் சந்திக்கிறார். இந்நிலையில், இங்கிலாந்து சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுபற்றி அவர், உலகளாவிய வளர்ச்சிக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் வலிமையான நட்புறவு அத்தியாவசியம் வாய்ந்தது என குறிப்பிட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து, அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரை வரவேற்காகவும், அவரை காண்பதற்காகவும் குவிந்து இருந்தனர். இந்திய தேசிய கொடிகளை ஏந்தியபடியும், பிரதமரின் உருவம் கொண்ட புகைப்படங்களையும் சுமந்தபடி பெண்கள், சிறுமிகள் என பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரை வரவேற்றனர்.
அவர்களுடன் பிரதமர் மோடி கைகுலுக்கி கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவின் வளர்ச்சியில் அவர்களுடைய அன்பும் மற்றும் பேரார்வமும் உண்மையில் ஊக்கமளிக்கிறது என்று பதிவிட்டு உள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் இரு நாடுகள் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் முறைப்படி இறுதி செய்யப்படும். இதுதவிர, பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றிலும் இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.