இந்தோனேசியா: பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி; 99 பேர் காயம்
இந்தோனேசியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர்.;
ஜகர்த்தா,
இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா நகரில் அல் கோஜினி என்ற பெயரிலான பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், நேற்று (செவ்வாய் கிழமை) மதியம் கட்டுமான பணி நடந்து வந்த கட்டிடம் ஒன்றின் கீழ் தளத்தில் இருந்த மசூதியில் மாணவர்கள் இறை வணக்கத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கட்டிடத்தின் மேல் தளம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களில் 13 வயது சிறுவன் உள்பட 3 மாணவர்கள் பலியாகி உள்ளனர்.
99 மாணவர்கள் காயமடைந்தனர். 91 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இடிபாடு பகுதிகளுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.
எனினும், காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. கட்டிடம் பலவீனமடைந்து காணப்படுகிறது. இதனால், அதிக கனம் மிகுந்த சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது. போலீசார், மீட்பு பணியாளர்கள் மற்றும் வீரர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இரவிலும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.