சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.;

Update:2025-08-30 12:40 IST

டோக்கியோ,

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நேற்று சென்றார். அங்கு டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவும், ஜப்பானும் இணைந்து இந்த நூற்றாண்டை நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பானதாக உருவாக்கும் என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தொடர்ந்து பிரதமர் மோடி இன்று ஜப்பானில் உள்ள சுமார் 16 மாகாணங்களின் கவர்னர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்திய அரசு மற்றும் ஜப்பான் மாகாணங்கள் இடையிலான கூட்டு ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம்  சீனாவுக்கு சென்றார்.   தியான்ஜின் நகரில் உள்ள பின்ஹாய் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன உயர் அதிகாரிகளும் இந்திய உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். விமான நிலையத்தில் கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 1-ந் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்