நைஜீரியா: நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்; 60 பேர் படுகொலை

ராணுவத்திற்கு உளவு வேலை பார்க்கிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.;

Update:2025-09-07 10:48 IST

மைதுகுரி,

நைஜீரியாவில் 16 ஆண்டுகளாக போகோ ஹரம் பயங்கரவாதிகள் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மேற்கத்திய கல்விக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்த கோரி வருகின்றனர்.

அந்நாட்டின் வடக்கே அமைந்த அண்டை நாடுகளான நைஜர் உள்பட பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் பரவி உள்ளது. இதனால், பொதுமக்களில் 35 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என ஐ.நா. அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்நிலையில், நாட்டின் வடகிழக்கே அமைந்த, தருல் ஜமால் பகுதியில் நேற்றிரவு திடீரென புகுந்த பயங்கரவாதிகள் கிராம மக்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தள்ளினர். இதில், அப்பாவி மக்கள் 60 பேர் வரை படுகொலை செய்யப்பட்டனர்.

இதனை போர்னோ மாகாண கவர்னர் பாபாகானா ஜுலும் நேற்று மாலை உறுதி செய்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம். வீடுகளில் வசிப்போர் வீடுகளை விட்டு விட்டு, வேறிடங்களுக்கு செல்ல வேண்டாம் என கெஞ்சி கேட்டு கொள்கிறோம்.

பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து விட்டோம். உணவு மற்றும் பிற உயிர்காக்கும் பொருட்களுக்கும் ஏற்பாடு செய்து விட்டோம் என தெரிவித்து உள்ளார்.

ராணுவத்திற்கு அல்லது எதிரி அமைப்புக்கு அவர்கள் உளவு வேலை பார்க்கிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்