டிரம்ப் உத்தரவின்படி... போதை பொருள் படகை தாக்கி தகர்த்த அமெரிக்க ராணுவம்; வைரலான வீடியோ

கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, 4 படகுகள் மீது பல்வேறு முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 14 பேர் பலியானார்கள்.;

Update:2025-10-30 17:36 IST

வாஷிங்டன் டி.சி.,

சர்வதேச நீர்வழிகளில் ஒன்றான கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் போதை பொருட்களை ஏற்றி சென்ற படகு ஒன்றை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. இதனை பென்டகள் ராணுவ தலைமையகத்தின் தலைவர் பீட் ஹெக்சேத் அவருடைய எக்ஸ் வலைதளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

போதை பொருட்களை ஒழிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முயற்சியின் ஒரு பகுதியாக நடந்த இந்த நடவடிக்கையில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனால், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் இதுவரை 62 பேர் மரணமடைந்து உள்ளனர்.

இதுதொடர்பாக பீட் ஹெக்சேத் வெளியிட்ட வீடியோ ஒன்றில், படகு ஒன்று நீரின் மீது மிதந்தபடி காணப்படுகிறது. இதனை தொடர்ந்து, அந்த படகு வெடித்து சிதறுகிறது. பெரிய அளவில் தீப்பிழம்பும் வெளிப்பட்டது. அமெரிக்க அரசு இதுபோன்று கடந்த காலங்களிலும் வீடியோ வெளியிட்டு உள்ளது. இதேபோன்று, இந்த வீடியோவிலும் எத்தனை பேர் இருந்தனர் என கண்டறிய முடியாத வகையில் இருந்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் 4 படகுகள் மீது பல்வேறு முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், 14 பேர் பலியானார்கள். ஒருவர் தப்பி விட்டார். உயிர் தப்பிய அவரை காப்பாற்றும்படி மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமிடம் அமெரிக்கா கேட்டு கொண்டது. ஆனால் அந்த தேடுதல் முயற்சி தோல்வியடைந்து விட்டது என கிளாடியா கூறினார். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்