ரஷிய, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி.. இந்தியாவுடனான நட்பு குறித்து அமெரிக்கா வெளியிட்ட பதிவு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் ரஷியா, சீனா அதிபர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்தார்.;
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.
அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆனால், வர்த்தக வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிய மாட்டோம். எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் இந்திய விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்க விட மாட்டேன் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறிவிட்டார். அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை சரிகட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவுடனான நட்பு தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுகிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்கா-இந்தியா இடையிலான கூட்டாண்மை தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுகிறது. இது 21 ஆம் நூற்றாண்டை வரையறுக்கும் மிகச்சிறந்த உறவு.
நமது மக்கள் மற்றும் நமது முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் முன்னிலைப்படுத்துகிறோம். புதுமை, தொழில்முனைவு, பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் என அனைத்து துறைகளிலும் நமது இருநாட்டு மக்களுக்கு இடையிலான நீடித்த நட்புதான் இந்தப் பயணத்தின் எரிசக்தியாக விளங்குகிறது” என்று பதிவிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று சீனாவின் தியான்ஜின் நகருக்கு சென்றார். மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். மாநாட்டிற்கு இடையே ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஒருவரோடு ஒருவர் சிரித்துப் பேசி கலந்துரையாடினர்.
சமீபத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதித்த டிரம்ப், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
இந்நிலையில், இன்று ரஷியா, இந்தியா மற்றும் சீனாவின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவு குறித்து அமெரிக்கா வலியுறுத்தியிருப்பது சர்வதேச அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.