கயானா துணை ஜனாதிபதியுடன் சசி தரூர் சந்திப்பு; இரு நாடுகளின் உறவை பற்றியும் ஆலோசனை

சசி தரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினரை, கயானா நாட்டில் இந்திய வம்சாவளியினர் சிறப்பாக வரவேற்றனர்.;

Update:2025-05-26 06:58 IST

ஜார்ஜ் டவுன்,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி அவை அழிக்கப்பட்டன.

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என கூறிய மத்திய அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியாவின் நிலைப்பாட்டை பற்றி உலக நாடுகளுக்கு விளக்குவதற்காக, பல்வேறு கட்சிகளை சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது.

இதன்படி, அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை கொண்ட பல்வேறு குழுக்கள் உலக நாடுகளுக்கு பயணம் செய்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன்படி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு ஒன்று கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சசி தரூர் எம்.பி., நேற்று காலை அளித்த பேட்டியில், பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக எந்தவித குற்ற விசாரணையோ, தீர்ப்போ இல்லை. பயங்கரவாத உட்கட்டமைப்புகளை அழிக்கும் எந்த முயற்சியும் பாகிஸ்தான் அரசால் மேற்கொள்ளப்படவில்லை. பதிலாக, அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை செய்ததற்காக, பாகிஸ்தான் எதிர்விளைவை பெற போகிறது என்றார்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர், கயானா நாட்டிற்கு சென்று சேர்ந்தனர். அவர்களை இந்திய வம்சாவளியினர் சிறப்பாக வரவேற்றனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர்கள் பேசும்போது, இந்த பயங்கரவாதத்திற்கு கயானாவில் உள்ள நாங்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

இந்திய குடிமக்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம். அவர்களுக்கு எங்களுடைய இரங்கல்கள். பாகிஸ்தானின் இந்த பயங்கரவாத செயலுக்கு எதிரான பிரதமர் மோடியின் இந்த கடுமையான அணுகுமுறைக்கும் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்றனர்.

இந்நிலையில் கயானாவில், அந்நாட்டின் துணை ஜனாதிபதி பாரத் ஜக்தியோவை, சசி தரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர் நேரில் சந்தித்து பேசினர். இதன்பின்னர் ஜார்ஜ் டவுனில் செய்தியாளர்களிடம் இன்று காலை பேசிய சசி தரூர், இது ஓர் உன்னத சந்திப்பு.

துணை ஜனாதிபதி ஜக்தியோ நம்முடைய நாட்டின் நண்பர். அண்டை நாட்டுடனான (பாகிஸ்தான்) சமீபத்திய நிகழ்வுகளில் நம்முடைய நிலையை பற்றி பெரிய அளவில் அவருக்கு புரிதல் உள்ளது. கயானாவின் வளர்ச்சி பற்றியும் விரிவான அளவில் நாங்கள் உரையாடினோம்.

அதில், இந்தியாவின் பங்கு இருப்பதற்கான சூழல் பற்றியும் பேசினோம் என்றார். தொடர்ந்து அவர், கயானாவில் மிக பெரிய அளவில் விரிவாக்க பணிகள் நடந்துள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டறியப்பட்டு உள்ளது.

அவற்றை கொண்டு உட்கட்டமைப்பு மாற்றங்களை செய்திருக்கின்றனர். இந்த செயல்முறையில் பங்கேற்க இந்தியாவும், இந்தியர்களும் வரவேற்கப்படுகின்றனர். அதற்கான தெளிவான அனுமதியும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்திய தொழிலாளர்களும் அதற்கான பணியில் பங்கேற்று வருகின்றனர் என கூறியுள்ளார்.

நம்முடைய நிலைப்பாட்டை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் வந்தோம். அந்த பணி நிறைவடைந்து விட்டது. அவர்கள் நம்மை புரிந்து கொண்டனர். அதுதவிர இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை பற்றியும் விரிவான அளவில் நாங்கள் பேசினோம் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்