தென்கொரியா: ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்து - 4 வீரர்கள் உயிரிழப்பு

நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது.;

Update:2025-05-30 02:54 IST

சியோல்,

கொரியா தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடுகளாக தென்கொரியா மற்றும் வடகொரியா உள்ளது. உலக நாடுகளின் கண்டனங்கள், எதிர்ப்புகள் எதையும் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.

ஒரு பக்கம் வடகொரியா உடன் தரைப்பரப்பில் எல்லையை தென்கொரியா பகிர்ந்து கொண்டுள்ளது. மற்ற 3 பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ள தென்கொரியா, வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ராணுவ அளவில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

அந்தவகையில் தங்களுடைய கடல் பரப்பை எதிரிநாடான வடகொரியாவிடம் இருந்து பாதுகாப்பதற்காக முப்படைகளை சேர்ந்த போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் ரோந்து சுற்றி வருகின்றன. தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள போகாங் மாகாணம் கடல் பரப்பை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் கடல் பரப்பிலும் அந்த நாட்டின் ராணுவ விமானங்கள் தொடர்ந்து ரோந்துப்பணி மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில் அங்கு கடல் பரப்பின்மேல் பறந்தபடி கடற்படைக்கு சொந்தமான ராணுவ விமானம் ஒன்று ரோந்து மேற்கொண்டது. அந்த விமானத்தில் ராணுவ உயர் அதிகாரி உள்பட 4 ராணுவ வீரர்கள் இருந்தனர்.

நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கண்காணிப்பு அறை உடனான தொடர்பை இழந்து வானில் இருந்து வட்டமடித்தபடி அங்குள்ள அங்குள் கடற்கரை கிராமத்தின் அருகே தரையில் மோதி விழுந்தது.

மோதிய வேகத்தில் அந்த விமானம் தீப்பிடித்து முழுவதுமாக கருகி எலும்புக்கூடானது. இந்த கொடூர விபத்தில் விமானத்தில் இருந்த 4 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புத்துறையினர், ராணுவ உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப்பணி மேற்கொண்டு விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்